
ஐதராபாத்,
ஐ.பி.எல். தொடரில் இன்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி பேட்டிங்கை தொடங்கிய பஞ்சாப் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. ஷமி வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரி அடித்து பிரம்சிம்ரன் சிங் அதிரடி காட்டினார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரியன்ஷ் ஆர்யாவும் வேகமாக மட்டையை சுழற்ற பஞ்சாப் 3 ஓவர்களில் 50 ரன்களை கடந்தது. தொடர்ந்து அதிரை காட்டிய பிரியன்ஷ் ஆர்யா 13 பந்துகளில் 36 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் அதிரடி காட்ட பஞ்சாப் அணியின் ரன்ரேட் வேகமாக உயர்ந்தது. வெறும் 8.1 ஓவர்களிலேயே பஞ்சாப் 100 ரன்கள் அடித்தது.

இதனிடையே பிரம்சிம்ரன் சிங் 42 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய நேஹல் வதேரா நிதானமாக விளையாட ஸ்ரேயாஸ் ஐயர் ஐதராபாத் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வதேராவின் ஒத்துழைப்புடன் வெறும் 22 பந்துகளில் ஸ்ரேயாஸ் அரைசதம் அடித்தார். தொடர்ந்து ஐயர் அதிரடி காட்ட மறுமுனையில் நேஹல் வதேரா 27 ரன்களிலும், ஷசாங்க் சிங் 2 ரன்களிலும், மேக்ஸ்வெல் 3 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்ரேயாஸ் வெறும் 36 பந்துகளில் 82 ரன்கள் அடித்த நிலையில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் (34 ரன்கள்) அதிரடியாக விளையாடினார். குறிப்பாக முகமது ஷமி வீசிய ஆட்டத்தின் 20-வது ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 4 சிக்சர்கள் விளாசி அசத்தினார்.

முடிவில் 20 ஓவர்களில் பஞ்சாப் 6 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 246 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களமியங்கிய ஐதராபாத் அணியில், அபிஷேக் சர்மா மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். தொடக்கம் முதலே இந்த ஜோடி அதிரயாக ரன்கள் குவிக்கத் தொடங்கியது. பின்னர் அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோர் தங்கள் அரைசதத்தினை பதிவு செய்து அசத்தினர். இந்த ஜோடியில் சிறப்பாக ஆடி வந்த டிராவிஸ் ஹெட் 66 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அபிஷேக் சர்மாவுடன், கிளாசன் ஜோடி சேர்ந்தார்.

தொடர்ந்து வாணவேடிக்கை காட்டி வந்த அபிஷேக் சர்மா 40 பந்துகளில் தனது சதத்தை பூர்த்தி செய்து அசத்தினார். தொடர்ந்து பஞ்சாப் அணியினரின் பந்துவீச்சை துவம்சம் செய்த அபிஷேக் சர்மா, அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.

ஐதராபாத் அணி வெற்றிக்கு 24 ரன்கள் தேவைப்பட்டநிலையில், அபிஷேக் சர்மா 55 பந்துகளில் 10 சிக்சர்கள், 14 பவுண்டரிகளுடன் 141 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார்.
முடிவில் இஷான் கிஷன் 9 (6) ரன்களும், கிளாசன் 21 (14) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 247 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் மற்றும் சாஹல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அனி அபார வெற்றிபெற்றது. இதன்படி ஐதராபாத் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில், 4 புள்ளிகளுடன் 2வது வெற்றியை பதிவு செய்தது.