வாட்ஸ் அப் தகவல்கள் கசிந்தன திரிணாமுல் காங். எம்பிக்கள் இடையே உட்கட்சி மோதல்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு

1 week ago 4

கொல்கத்தா: பாஜ ஐடி பிரிவு தலைவர் அமித் மாள்வியா நேற்று சமூக ஊடக தளத்தில் சில ஸ்கிரீன் ஷாட்களை பகிர்ந்தார். அவை, திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் கீர்த்தி ஆசாத் இடையே நடந்த கடுமையான வார்த்தை மோதல்கள் என கூறப்படுகிறது. இது குறித்து மாள்வியா கூறுகையில், ‘‘தேர்தல் ஆணையத்தில் மனு கொடுக்க சென்ற போது திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் இருவர் இடையே மோதல் வெடித்துள்ளது. அதில் ஒருவர் பெண் எம்பி.

இந்த மோதல் தொடர்பாக வாட்ஸ்அப்பில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கள் வார்த்தை மோதலில் ஈடுபட்டுள்ளனர்’’ என கூறி உள்ளார். தேர்தல் ஆணைய அலுவலகத்தில் வாக்குவாதம் நடந்ததை எம்பி கல்யாண் பானர்ஜி ஒப்புக் கொண்டுள்ளார். கொல்கத்தாவில் நேற்று அவர் அளித்த பேட்டியில், ‘‘நான் 40 ஆண்டாக அரசியலில் இருக்கிறேன். நாடாளுமன்றத்தில் போராடுபவன் நான். குறிப்பிட்ட தொழில் நிறுவனத்தை பற்றி மட்டும் வெறி கொண்டவன் நான் அல்ல.

அந்த பெண் எம்பி சரளமாக ஆங்கிலத்தில் பேசுவதால் அவர் யாரையும் அவமதிக்க முடியும் என்று அர்த்தமல்ல. நான் அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக என்னை கைது செய்யும் படி பாதுகாப்பு பணியாளர்களிடம் அவர் முறையிட்டார்’’ என்றார். இதுதொடர்பாக இரு எம்பிக்களும் கட்சி தலைவர் மம்தா பானர்ஜியிடம் வாய்மொழி புகார் கொடுத்துள்ளனர்.

இந்த சர்ச்சை குறித்து பேட்டி அளித்த திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்பி சவுகதா ராய், ‘‘கல்யாண் பானர்ஜி கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளார். எனவே அவரை கட்சி தலைமை கொறடா பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். அவர் கட்சியில் அனைவரிடமும் தவறாக நடந்து கொள்கிறார், அவமதிக்கிறார்’’ என்றார். இதன் மூலம் திரிணாமுல் காங்கிரசில் உட்கட்சி மோதல் முற்றியிருப்பது மேற்கு வங்க அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வாட்ஸ் அப் தகவல்கள் கசிந்தன திரிணாமுல் காங். எம்பிக்கள் இடையே உட்கட்சி மோதல்: மேற்கு வங்க அரசியலில் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article