
கோவை,
கோவை மாவட்ட பா.ஜ.க. அலுவலகம் திறப்பு விழா பீளமேட்டில் நடந்தது. மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் அவர் அலுவலகத்தை பார்வையிட்டார். கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், கட்சியின் முன்னணி நிர்வாகிகள், பா.ஜ., எம்.எல்.ஏ., மத்திய அமைச்சர் முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, "மார்ச் 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த என்ன தேவை உள்ளது? நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு அநியாயம் நடப்பதாக 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்கான கடிதம் எங்களுக்கு கிடைத்துள்ளது. அதற்கு நன்றி சொல்லிக் கொள்கிறோம்.
இந்த நிலையில் மத்திய மந்திரி அமித்ஷா, தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் போது நிச்சயம் முறையாக நடத்தப்படும். விகிதாச்சார அடிப்படையில் 543 தொகுதியில் இருந்து 20 சதவிகிதம் உயர்கிறது என்றால், அதே அடிப்படையில் அனைத்து மாநிலங்களின் தொகுதிகளும் உயரும். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக மத்திய மந்திரி அமித்ஷா தெளிவாக தெரிவித்து விட்டார். அதனால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, யார் தமிழ்நாட்டிற்கு தொகுதிகள் குறைகிறது என்று சொன்னார்கள் என்று கேள்வி எழுப்புகிறோம்.
அதேபோல் த.வெ.க.வின் 2-ம் ஆண்டு தொடக்க விழாவில் நடந்துள்ளது. விஜய் பேசும் போது, மத்திய அரசு மற்றும் மாநில அரசு என்று இரண்டையும் குற்றம் சாட்டியுள்ளார். உங்கள் குழந்தைக்கு மூன்று மொழி.. நீங்கள் நடத்தும் விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் மூன்று மொழி. ஆனால் த.வெ.க. தொண்டர்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இரு மொழியா..
விஜய் சொல்வதை தன் வாழ்க்கையிலும் கடைபிடிக்க வேண்டும். கெட் அவுட் என்று கையெழுத்து இயக்கம் தொடங்கி இருக்கிறார். கெட் அவுட் கையெழுத்து இயக்கம் தொடங்கிய சில நொடிகளில் பிரசாந்த் கிஷோர் விலகி சென்றுவிட்டார். அதற்கான மரியாதை அங்கேயே தெரிந்துவிட்டது. விஜய்-க்கு ஆலோசனை சொல்லும் பிரசாந்த் கிஷோரின் நடவடிக்கையும் அனைவருக்கும் காட்டி கொடுத்துவிட்டது. அதனால் எங்கேயும், யாரும் மொழியை திணிக்கவில்லை.
நீங்களே ப்ரோ என்று சொல்லி பொய் சொல்லலாமா ப்ரோ..? பிரசாந்த் கிஷோருக்கு ஒரு கேள்வி. அவர் ஏன் தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தினார்? அதற்காக மக்கள் அவரை மன்னிக்க மாட்டார்கள். தனிப்பட்ட முறையில் உங்களுக்கும் எங்களுக்கும் என்ன பிரச்சனை" என்று அவர் கேள்வி எழுப்பினார்.