
பெங்களூரு,
கர்நாடகாவில் நடந்து வரும் காங்கிரஸ் ஆட்சியில் துணை முதல்-மந்திரியாக பதவி வகிக்கும் டி.கே. சிவக்குமார் நீர்வள துறையையும் கவனித்து வருகிறார். இந்நிலையில், டெல்லிக்கு நேற்று பயணம் மேற்கொண்ட அவர், மத்திய மந்திரி சி.ஆர். பாட்டீலை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பில், கர்நாடகாவுக்கான நிலுவையிலுள்ள பல்வேறு நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒப்புதல்களை பெறுவது பற்றி முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில், நிருபர்களை இன்று சந்தித்து பேசிய துணை முதல்-மந்திரி டி.கே. சிவக்குமார், மேகதாது விவகாரத்தில் உங்களுடைய நிலைப்பாடு என்ன? என மத்திய அரசிடம் கேள்வி எழுப்பினேன்.
இதனை நாங்கள் வலியுறுத்தலாம். அல்லது அவர்கள் அதனை எதிர்க்கலாம். அல்லது முடியாது என கூறலாம். ஆனால், அவர்களுடைய நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த வேண்டும் என கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தொடர்ந்து காலதாமதம் ஏற்படுவதில் எங்களுக்கு விருப்பமில்லை. அதனால், தங்களுடைய நிலையை பற்றி சுப்ரீம் கோர்ட்டிடம் மத்திய அரசு தெரியப்படுத்த வேண்டும் என கர்நாடகா விரும்புகிறது என வலியுறுத்தினேன். இதனால், கர்நாடகா மற்றும் தமிழகம் பயன்பெற முடியும் என்றார்.
காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள தமிழக அரசு, அரசியல் காரணங்களுக்காக இதனை எதிர்க்கிறது என்று அப்போது அவர் கோடிட்டு காட்டினார். மேகதாது அணை கட்டப்பட்டால், அவர்களுக்கு நாங்கள் சிக்கலை ஏற்படுத்தி விடுவோம் என அஞ்சுகிறார்கள்.
ஆனால், அப்படியல்ல என அவர் கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே இந்த அணையை கட்டுவது, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் எதிர்மறை தாக்கம் ஏற்படுத்தி விடக்கூடும் என கூறி, இத்திட்டத்திற்கு தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எனினும், 2019-ம் ஆண்டு நிலவரப்படி ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவது என முடிவாகி இருந்தது.