
சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 1-ந் தேதி வெளியாகி உள்ளது. அதனை தொடர்ந்து ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார்.
இதற்கிடையில் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை வெற்றிமாறன் இயக்கவுள்ளார். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் இந்த படத்திற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை கடந்த ஆண்டு படக்குழு வெளியிட்டது. அதனை தொடர்ந்து சமீபத்தில் 'வாடிவாசல்' படத்தின் தயாரிப்பாளர் எஸ். தாணு , படப்பிடிப்பு பணி விரைவில் தொடங்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் 'வாடிவாசல்' திரைப்படத்திற்கான பாடல் இசையமைப்புப் பணிகளை தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இப்படம் தொடர்பான அடுத்தடுத்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
