சென்னை,
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. இவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் 'ரெட்ரோ' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் மே 1-ந் தேதி வெளியாகி உள்ளது. தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யா வக்கீல் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் இயக்குனர் வெற்றிமாறன் நடிகர் சூர்யாவை வைத்து 'வாடிவாசல்' என்ற படத்தை இயக்க திட்டமிட்டிருந்தார். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக வேல்ராஜ், இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் ஆகியோர் பணிபுரிய உள்ளனர். ஆனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் தாமதமாகி கொண்ட போகின்றன.
'சூர்யா 45' படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த பின்னர் சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. அதன்படி, வாடிவாசல் திரைப்படத்தின் பணிகள் பிப்ரவரி மாதம் சென்னையில் துவங்க உள்ளதாகவும், படத்திற்கான அனிமேஷன் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தை மூன்று பாகங்களாக இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, தமிழில் 'பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி, ஆக்சன், கேப்டன்' போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. விரைவில் இப்படத்தின் அப்டேட்டுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.