
மதுரை,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா காடுபட்டி காவல் நிலைய சரகம் மன்னாடிமங்கலம் கிராமத்தில் தனியார் வங்கி ஒன்று இயங்கி வருகிறது. இந்த வங்கியில் துணை மேலாளராக கணேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 14-ந் தேதி இந்த வங்கியில் தணிக்கை நடந்தது. இதில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளில் சுமார் 70 பவுன் நகைகள் மாயமாகி இருந்ததாக தெரியவந்தது. இதுகுறித்து வங்கி கோட்ட மேலாளர் ஜெய்கிஷான், காடுபட்டி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், வங்கியின் துணை மேலாளர் கணேஷ், நகைகளை திருடியது தெரியவந்தது. இதையடுத்து கணேசை போலீசார் கைது செய்தனர். இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் இழந்ததால் அதிக கடன் வாங்கி இருந்ததாகவும், அந்த கடனை அடைக்க வங்கியில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை கணேஷ் கையாடல் செய்து இருக்கலாம் என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.