வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு; ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூர், அவிநாசியில் கடையடைப்பு

2 months ago 12

திருப்பூர்: வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்த ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூர் மற்றும் அவிநாசியில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. ஒன்றிய அரசு வாடகை கட்டிடங்களுக்கான 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதித்துள்ளது. இதனால் கடைகள், தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு வகைகளில் வரி உயர்வு ஏற்பட்டுள்ளது. இதை கண்டித்து திருப்பூர் அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து தொழில் அமைப்புகள் கூட்டமைப்பு சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி இன்று காலை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்டிக்கடை, டீக்கடை, ஓட்டல், பேக்கரி, மளிகை கடைகள், ஜவுளி, நகைக்கடைகள் உள்ளிட்ட வணிக வளாகங்கள், வர்த்தக நிறுவனங்கள், சில பனியன் நிறுவனங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஒரு சில கட்சிகளை தவிர மற்ற கட்சியினர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதுபோல் அனைத்து வியாபார அமைப்புகள், வணிகர்கள் சங்கத்தினர், தொழில் அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன.

அவிநாசி: அவிநாசியிலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு திருப்பூர் ஓட்டல் உரிமையாளர் சங்கம், அவிநாசி கினை அவிநாசி நகை கடை உரிமையாளர்கள் சங்கம், அவிநாசி பைக் டெக்னீசியனிஸ் அசோசியேசன், அவிநாசி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் நல சங்கம், திருப்பூர் மாவட்ட செல்லுலார் சங்கம், ஜவுளிகடை உரிமையாளர்கள் சங்கம், திருப்பூர் மாவட்ட போட்டோ மற்றும் வீடியோ அசோசியேசன், அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கம், மளிகை வியாபாரிகள் சங்கம், ரைஸ்மில் மற்றும் நெல் அரிசி வியாபாரிகள் சங்கம், அவிநாசி வாகன பணிமனை நண்பர்கள் நலசங்கம், தமிழ்நாடு சவரத்தொழிலாளர் சங்கம், மோட்டார் வாகன ஆலோசகர்கள் நலச்சங்கம், அவிநாசி ஹார்டுவேர் எலக்ட்ரிக்கல் அசோசியேசன் ஆகிய சங்கங்கள் ஆதரவு தெரிவித்து கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

The post வாடகை கட்டிடங்களுக்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்பு; ஒன்றிய அரசை கண்டித்து திருப்பூர், அவிநாசியில் கடையடைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article