வாக்காளர்களாக மாறிவரும் வடமாநில தொழிலாளர்கள்: புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்க்கும் அரசியல் கட்சியினர்

18 hours ago 2

 

கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் 7000 வட மாநில தொழிலாளர்கள் வாக்களித்ததாக கூறப்பட்டது. இவை அடிப்படையில் வருகின்ற தேர்தலில் தொழிலாளர்களின் வாக்கு சதவீதம் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

திருப்பூர்: வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ள தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு வருகை தரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவ்வாறு வரும் வட மாநில தொழிலாளர்கள் வாக்காளர்களாக மாறும் நிலையில் அவர்களை வாக்குகளை ஏற்க திருப்பூரில் தேசிய கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயமும் அதற்கு அடுத்தபடியாக உற்பத்தி சார்ந்த தொழில்களும் அதிகளவு நடைபெற்று வருகிறது. பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி ஏற்றுமதி பிரதான தொழிலாக இருந்து வருகிறது. பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் செயல்படும் இந்நிறுவனங்களில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் மட்டுமல்லாது இந்தியாவின் குஜராத், உத்திர பிரதேசம், பீகார், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வந்து தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.

கடத்த 10 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் வேலை தேடி தமிழகத்திற்கும் குறிப்பாக மேற்கு மண்டலத்திற்கு வரும் வட மாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 6 லட்சத்திற்கு அதிகமான புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரியலாம் என கூறப்படுகிறது. தினசரி திருப்பூர் வரும் வடமாநில ரயில்களில் குறைந்தபட்சம் 300 முதல் 1000 பேர் வரை திருப்பூர், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு வருகை தருகின்றனர். ஆரம்பத்தில் தனி நபராக வரும் வடமாநில தொழிலாளர்கள் தங்களுக்கு ஏற்றவாறு தொழில் அமைந்துவிட்டால் பிறகு குடும்பமாக குடிபெயர்த்து இங்கேயே தங்க தொடங்குகின்றனர். பணி பாதுகாப்பு, உழைப்புக்கான ஊதியம் உள்ளிட்டவை காரணமாக மற்ற மாநிலங்களை விட வட மாநில தொழிலாளர்களின் வருகை தமிழகத்தில் அதிகம்.

திருப்பூரில் பனியன் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மட்டுமல்லது கட்டுமானத்துறை, பேக்கரி மற்றும் உணவுகங்கள், மருத்துவமனை, மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் உள்ள தேங்காய் எண்ணெய் மற்றும் அரிசி ஆலைகள் உள்ளிட்டவைகளிலும் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் பேர் பணியாற்றி வருகின்றனர். ஒன்றிய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு புலம்பெயர் தொழிலாளர்களும் இங்கேயே ரேஷன் பொருட்களை வாங்கி பயன்படுத்த தொடங்கி உள்ளனர். இதன் காரணமாகவும் வடமாநில தொழிலாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. பல ஆண்டு காலமாக திருப்பூர் வந்து தங்கி பணிபுரிந்து வரக்கூடிய புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளூர்ர் வாசிகளாகவே மாறிவிட்டனர்.

அவர்கள் இங்கேயே ஆதார் கார்டு, ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருப்பூரில் உள்ள முகவரிக்கு பெற்று வாக்காளர்களாகவும் மாறி வருகின்றனர். குறிப்பாக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் கூட கணிசமாக வட மாநில தொழிலாளர்களின் வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 5ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்றத் தேர்தலில் 7000 வட மாநில தொழிலாளர்கள் வாக்களித்ததாக கூறப்பட்டது. இவை அடிப்படையில் வருகின்ற தேர்தலில் தொழிலாளர்களின் வாக்கு சதவீதம் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் வளர்ந்து வரும் வாக்கு வங்கியான புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குகளை அள்ளிச் செல்ல திருப்பூரில் தேசிய கட்சிகள் தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இதற்காக வடமாநில தொழிலாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அவர்களுக்கான மாநாடு மற்றும் கருத்தரங்குகளை திட்டமிட்டு நடத்த துவங்கியுள்ளனர். இதற்கான அழைப்பிதழ்கள் மற்றும் தீர்மானம் கிடைக்கும் தமிழ், ஆங்கிலம் மட்டுமல்லாது அவர்களுக்கும் கொண்டு செல்லக்கூடிய வகையில் ஹிந்தியில் அச்சடித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு பாஜ சார்பில் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கூட்டம் நடத்தப்பட்டது. இதில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த எம்பி வரவழைக்கப்பட்டு பேச வைக்கப்பட்டனர். தற்போது , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கமான ஏஐடியுசி சார்பில் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை திருப்பூரில் நடத்தப்பட உள்ள புலம்பெயர் தொழிலாளர்களின் வேலை மற்றும் சட்ட பாதுகாப்பிற்கான கருத்தரங்கம் குறித்த போஸ்டர்கள் இந்தியில் அடித்து விநியோகிக்கப்படுவது மட்டுமல்லாது திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஹிந்தியில் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தேசிய கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில்“ சமீப காலங்களில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தவிர்க்க முடியாத வாக்காளர்களாக வடமாநில தொழிலாளர்கள் மாற்றம் பெற்று வருகின்றனர்.

வெற்றியை தீர்மானிக்கக் கூடிய சக்தியாக அவர்கள் இல்லாவிட்டாலும் தற்போதுள்ள பலமுனை போட்டிகளுக்கு மத்தியில் அவர்களது குறைந்தபட்ச வாக்குகளும் இன்றியமையாததாக உள்ளது. அதன் காரணமாக அவர்களின் வாக்குகளையும் பெறவேண்டிய அவசியம் உள்ளது. வெறுமென ஓட்டுக்காக மட்டுமல்லாது தமிழகத்தில் அவர்களுக்கான பாதுகாப்பு உள்ளது என்பதை அவர்களிடத்தில் சொல்லவும், அவர்களுக்கான உரிமைகள் குறித்து விளக்கவும் கருத்தரங்குகள் மாநாடுகள் நடத்தப்படுகிறது. இதன் மூலம் தமிழகத்தில் அவர்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்வதோடு தமிழர்களோடு இணக்கமாக வாழவும் வழிவகை ஏற்படுவதாக தெரிவித்தார்.

இந்தியில் விளம்பரங்கள்
தமிழகம் முழுவதும் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பு ஆகியவற்றிற்கு எதிராக கருத்துகளும் போராட்டங்களும் நிலவி வருகிறது, இந்நிலையில் திருப்பூரில் கட்சிகள் ஹிந்தியில் வைக்கும் இந்த விளம்பர போஸ்டர்கள் விமர்சனத்திற்கு உள்ளாகிறது. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காகவே அவர்களுக்கு நன்கு அறிந்த மொழியில் விளம்பரப்படுத்தி வருவதாக தெரிவிக்கின்றனர்.

The post வாக்காளர்களாக மாறிவரும் வடமாநில தொழிலாளர்கள்: புலம்பெயர் தொழிலாளர்களை ஈர்க்கும் அரசியல் கட்சியினர் appeared first on Dinakaran.

Read Entire Article