கோவை, பிப்.17: கோவை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியில் கடந்த மாதம் 6ம் தேதி வெளியிடப்பட்டது. மாவட்டத்தில் 15,58,678 ஆண் வாக்காளர்கள், 16,26,259 பெண் வாக்காளர்கள் மற்றும் 3ம் பாலின வாக்காளர்கள் 657 பேர் என மொத்தம் 31,85,594 வாக்காளர்கள் இருப்பதாக தெரிய வந்தது. தமிழக சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் மட்டும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்லைன் மூலம் 9,238 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. இதில் இளம் தலைமுறையினர் அதிகமாக பங்கேற்று விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வழங்கினர். இந்த விண்ணப்பங்கள் எல்லாம் பரிசீலனை செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், பிழைகள் திருத்தம் செய்யவும் கடந்த 3 மாதங்களாக பலர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர். புதிதாக பெயர் சேர்க்க 9,328 பேரும், நீக்கம் செய்ய 6,306 பேரும், பிழைகள் திருத்தம் செய்ய 18,244 பேர் என மொத்தம் 33,878 பேர் விண்ணப்பித்தனர் என மாவட்ட தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
The post வாக்காளர் பட்டியல் 33 ஆயிரம் பேர் ஆன்லைனில் விண்ணப்பம் appeared first on Dinakaran.