சென்னை,
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில் பெயர் சேர்க்க 8.38 லட்சம் விண்ணப்பங்கள் உட்பட 14 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வரும் ஜன.1-ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணிகள் கடந்த அக்.29-ம் தேதி தொடங்கியது. இதற்கான இரண்டாம் கட்ட சிறப்பு முகாம்கள் கடந்த நவ 23,24ம் தேதிகளில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்றன. இந்த சிறப்பு முகாம்களில் , வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தல், இடமாற்றம், ஆதார் எண்ணை இணைப்பதற்காக படிவங்கள் பெறப்பட்டன.
இந்த சிறப்பு முகாம்களில் மட்டும் மொத்தம் 14 லட்சத்து 615 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 8 லட்சத்து 38 ஆயிரத்து 16 பேர் மனு கொடுத்து இருக்கின்றனர். வெளிநாட்டில் வசிக்கும் 4 பேர் தங்களது பெயரை சேர்க்க கூறி விண்ணப்பித்து இருக்கிறார்கள்.
வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க 783 பேரும், பெயரை நீக்க கோரி 1 லட்சத்து 19 ஆயிரத்து 701 பேரும், பெயர் திருத்தம், முகவரி மற்றும் புகைப்பட மாற்றம் ஆகிய பணிகளை மேற்கொள்ள 4 லட்சத்து 42 ஆயிரத்து 111 பேரும் மனு கொடுத்து உள்ளனர். இதுதவிர ஆன்லைனில் 65 ஆயிரத்து 817 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். ஆக மொத்தம் 14 லட்சத்து 66 ஆயிரத்து 432 பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். பொதுமக்கள் வருகிற 28-ந் தேதி வரை சம்பந்தப்பட்ட அலுவலகங்கள் அல்லது ஆன்லைன் முறையில் விண்ணப்பம் செய்யலாம். இந்த மனுக்கள் உரிய முறையில் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானவை வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படும்.
பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் அடுத்த ஆண்டு (2025) ஜனவரி மாதம் 6-ந் தேதி வெளியிடப்படும். எனவே இதுவரை பெயர் சேர்க்காத வாக்காளர்கள், அல்லது முகவரி மாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள விரும்புபவர்கள் உடனடியாக அந்த பணியினை மேற்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.