வள்ளுவருக்கு சிலை அமைத்து புகழ் சேர்த்தது கலைஞர் என சிறு குழந்தைக்கு தெரிந்த விஷயம் கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாதா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி

2 weeks ago 1

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் நடைபெற்று வரும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். மேயர் பிரியா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர். பின்னர், அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது: வள்ளுவர் கோட்டம் புனரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வரும் தை மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும். திருவான்மியூர் முதல் அக்கரை வரை 6 வழி சாலை அமைக்க நில எடுப்புக்கு 2009ம் ஆண்டு வெறும் ரூ.10 கோடி இருந்த நிலையில் தொடர்ந்து தாமதமானதால் தற்போது நிலம் கையகப்படுத்த ரூ.1000 கோடி வரை வந்துவிட்டது. 98% வரை நில எடுப்பு பணிகள் முடிவடைந்துவிட்டது.

ஒரு பகுதியில் விரிவாக்கப்பணி நடைபெற்று வருகிறது, விரைவாக அனைத்து பணிகளும் முடிவடைந்து விடும். திருவள்ளுவர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர் அதனால்தான் திருக்குறளை உலகப் பொதுமறை என்று சொல்கிறோம். வள்ளலாரையும், வள்ளுவரையும் நாங்கள் களவாடவில்லை திமுக தான் களவாடுகிறது. முக்கடல் சங்கமிக்கும் கடலில் வள்ளுவருக்கு சிலை நிறுவ ஆரம்பித்தது ஆர்எஸ்எஸ் தான் என்று வானதி சீனிவாசன் கூறியிருக்கிறார். வள்ளுவருக்கு காவி சாயம் பூசி, அவரை பாஜவினர் தான் அபகரிக்க நினைக்கின்றனர். கன்னியாகுமரியில் உள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட தெரியும் கலைஞர் தான் திருவள்ளுவர் சிலையை அமைத்தார் என்று. அது எப்படி வானதி சீனிவாசனுக்கு தெரியவில்லை அதுதான் எனக்கு ஆச்சரியமாக உள்ளது.

The post வள்ளுவருக்கு சிலை அமைத்து புகழ் சேர்த்தது கலைஞர் என சிறு குழந்தைக்கு தெரிந்த விஷயம் கூட வானதி சீனிவாசனுக்கு தெரியாதா? அமைச்சர் எ.வ.வேலு பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article