வள்ளலார் மையத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அரசுக்கு ஐகோர்ட் அனுமதி

3 months ago 17

சென்னை: வள்ளலார் கோயிலுக்கு பின்னால் பெருவெளியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை மறு உத்தரவு பிறப்பிக்கும் வர மேற்கொள்ளக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வள்ளலார் மையத்தில் இருந்து ஒரு கி.மீ தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமாணம் மேற்கொள்ள அரசுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகள் நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் சவுந்தர் அமர்வில் விசாரணையில் உள்ளன. இந்நிலையில், வள்ளலார் கோயிலின் பின்புறம் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கவும், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தில் முதியோர் இல்லம், சித்த மருத்துவமனை உள்ளிட்ட கட்டுமானங்கள் மேற்கொள்ளும் வகையில், விவசாய நிலத்தை வகை மாற்றம் செய்து வழங்கிய அனுமதிகளை எதிர்த்து புதிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த புதிய மனு மீதான விசாரணையின் போது, “சட்ட விதிகளைப் பின்பற்றாமல் ஒப்புதல்கள் வழங்கப்பட்டுள்ளதால், கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்” என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், அனைத்து அனுமதிகளும் விதிமுறைகள் படி பெறப்பட்டுள்ளது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அறநிலையத் துறை தரப்பிலும், வள்ளலார் கோவில் சார்பிலும் வாதம் முன்வைக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “தமிழ்நாடு நகரமைப்பு சட்ட விதிகளின்படி, விவசாய நிலத்தை விவசாயமில்லாத பிற பயன்பாட்டுக்கு வகை மாற்றம் செய்வது தொடர்பாக, நகரமைப்பு துறை உதவி இயக்குநர், வேளாண் துறை இணை இயக்குநர் மற்றும் மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்று அல்லது அறிக்கைகளை பெற்ற பிறகே நகரமைப்பு துறை இயக்குநர் ஒப்புதல் அளிக்க முடியும்.

ஆனால், இந்த விதிகளுக்கு முரணாக, வள்ளலார் கோயிலின் பின்புறம் கட்டுமானம் பணிகளை மேற்கொள்ள ஏதுவாக வேளாண் துறை உதவி இயக்குனர் அறிக்கை அளிப்பதற்கு 4 நாட்களுக்கு முன்பு, வகை மாற்றம் செய்து நகரமைப்பு இயக்குநர் உத்தரவிட்டுள்ளதால், அந்த பகுதியில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை எந்த கட்டுமானங்களும் மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேசமயம், கோயிலில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நிலத்தை வகைமாற்றம் செய்வது தொடர்பாக நகரமைப்பு இயக்குனர் விதிகளின்படி ஒப்புதல் வழங்கியுள்ளதால், அங்குக் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எந்த தடையும் இல்லை எனவும் பணிகளை தொடரலாம்” எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை அக்டோபர் 17-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post வள்ளலார் மையத்தில் இருந்து ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள நிலத்தில் கட்டுமானம் மேற்கொள்ள அரசுக்கு ஐகோர்ட் அனுமதி appeared first on Dinakaran.

Read Entire Article