சென்னை: வளர்ந்த மாநிலங்களைப் பாதிக் காத வகையில் நிதிப்பகிர்வு இருக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற 16-வது நிதிக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திப் பேசியதுடன் அதுதொடர்பாக மனுக்களும் அளிக்கப்பட்டன.
இக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் விவரம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த மனு: மாநில வரிப் பகிர்வான 41 சதவீதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். செஸ் மற்றும் கூடுதல் தீர்வை நிதியும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை தேவை, திறன் அடிப்படையில் கணக்கிட வேண்டும். குறிப்பிட்ட சில தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்க பரிந்துரைக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகளுக்கான கடன் வரம்பை சமமாக நிர்ணயிக்க வேண்டும்.