வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது

1 month ago 8

சென்னை: வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த அனுமதிக்கவும், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து நீர்வளத்துறை செயலாளர் மணிவாசன் வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது: மதுரையில் சாலை அமைக்கும் பணியின் காரணமாக விளாச்சேரி பிரதான சாலை முதல் மதுரை- திருமங்கலம் பிரதான சாலை வரையில் தென்கால் கண்மாய் பாதிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முதலில் சாலை பணிகளை நிறுத்த உத்தரவிடப்பட்டது. பின்னர் நீதிபதிகள் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு, சாலை அமைக்கும் திட்டத்தால் பாதிப்புகள் இல்லை என்பதால் தடை உத்தரவு நீக்கப்பட்டது.

மேலும் நீர்நிலைகளை பாதிக்காத வகையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்று கடந்த மார்ச் 7ம் தேதி உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடர்பாக ஏப்.16, ஜூன் 7, செப்.6 ஆகிய தேதிகளில் தலைமை செயலாளர் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை மேற்கொண்டார். இதில் நீர்நிலைகள் மற்றும் நீர்நிலை புறம்போக்குகளில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள அனுமதி அளிக்கவும், தடையில்லா சான்று வழங்கவும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் வரைவு வழிகாட்டுதல்களை வகுத்து அரசின் ஒப்புலுக்கு அனுப்பிவைத்தார். இதனை கவனமாக ஆய்வு செய்த அரசு வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த அனுமதிக்கவும், தடையில்லாச் சான்றிதழ் வழங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்களை அனைத்து அதிகாரிகளும் கடைபிடிக்க வேண்டும். இதனை முதன்மை பொறியாளார் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்கள் விவரம் பின்வருமாறு:
* விண்ணப்பிக்கும் முறை
வளர்ச்சி திட்டங்களுக்காக நீர் நிலைகளை பயன்படுத்த அனுமதி கோரும் விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட நிர்வாகப் பொறியாளரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து விவரங்கள், பூர்வாங்க வரைபடங்கள், தோராயமான செலவு மதிப்பீடு, விரிவான மதிப்பீடு மற்றும் திட்டத்தின் தேவை மற்றும் அவசியம் பற்றிய அறிக்கை ஆகியவை இணைக்கப்பட வேண்டும். அதனுடன் விண்ணப்ப கட்டணம் ரூ.5000 செலுத்த வேண்டும். முழுமையற்ற விண்ணப்பங்கள் அதற்கான காரணங்களைக் கூறி நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தைப் பெற்றவுடன், சம்பந்தப்பட்ட நிர்வாகப் பொறியாளர், திட்ட முன்மொழிபவருடன் இணைந்து ஆய்வு செய்ய வேண்டும்.

* தவிர்க்க முடியாத சான்றிதழ்
அரசு வளர்ச்சி திட்டங்களுக்கு நீர் நிலைகளை பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்று சான்றளிக்க வேண்டும், அதேபோல தனியார் நிறுவனங்களும் நீர்நிலைப் புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்று பெற தவிர்க்க முடியாத தன்மை நீர்வளத் துறையால் உறுதி செய்யப்படும். சென்னை மாவட்டம் தவிர உள்ளாட்சி அமைப்புகளின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள், நீர்நிலைப் புறம்போக்கு நிலங்களைப் பயன்படுத்துவது தவிர்க்க முடியாதது என்பதை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் உறுதிசெய்ய வேண்டும். சென்னை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள நீர்நிலைகளில், தவிர்க்க முடியாத தன்மையை சென்னை மாநகராட்சி ஆணையர் உறுதி செய்ய வேண்டும்.

* பாதிப்பு குறித்த ஆய்வறிக்கை
வளர்ச்சித் திட்டங்களை முன்மொழியும் அரசுத் துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் விரிவான திட்ட அறிக்கையில் நீரியல், நீரின் தரம், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆகியவற்றில் திட்டத்தின் தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கையை உள்ளடக்கியிருக்க வேண்டும். அரசின் தடையில்லாச் சான்றிதழ் தேவைப்படும் திட்டங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். ஆய்வுக்குத் தேவையான நீர்நிலை அளவுருக்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகப் பொறியாளரால் வழங்கப்பட வேண்டும். வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதால் நீர்நிலைகளின் தன்மை பாதிக்கப்படாமல் இருப்பதை சம்பந்தப்பட்ட செயல் பொறியாளர் உறுதி செய்ய வேண்டும்.

* முன்வைப்பு தொகை மற்றும் பயனர் கட்டணங்கள்
நீர்நிலைகளின் உன்மை தன்மையை மீட்டெடுக்க நீர்நிலைகளின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான செலவை திட்ட முன்மொழிபவர் ஏற்க வேண்டும். இத்தகைய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நீர்வளத் துறை ஒரு வைப்புப் பணியாக மேற்கொள்ளலாம். பொருந்தக்கூடிய வருடாந்திர பயனர் கட்டணங்கள் மற்றும் திரும்பப்பெறக்கூடிய வைப்புத்தொகையானது நீர்வளத் துறையால் பரிந்துரைக்கப்படும். நீர்வளத் துறை தொழில்நுட்ப ஆதரவு வழங்க தொழில்நுட்ப வழிகாட்டுதல் கட்டணம் ரூ.25,000 விண்ணப்பத்துடன் திட்ட முன்மொழிபவர் செலுத்த வேண்டும்.

* தடையில்லாச் சான்றிதழை வழங்க தகுதியான அதிகாரம்
அனைத்து விதமான ஏரிகள், குளம், குட்டை மற்றும் 30 மீட்டர் அகலம் உள்ள நீர் வழித்தடங்களுக்கு தமிழக அரசு சான்றிதழ் வழங்கும், 10 மீட்டர் முதல் 30 மீட்டர் அகலம் வரை உள்ள நீர் வழித்தடங்களுக்கு மண்டல முதன்மை பொறியாளர், 5 மீட்டர் முதல் 10 மீட்டர் அகலம் வரை உள்ள நீர் வழித்தடங்களுக்கு செயல்பொறியாளார், 5 மீட்டர் அகலம் வரை உள்ள நீர் வழித்தடங்களுக்கு நிர்வாக பொறியாளரும் சான்றிதழ் வழங்குவர்.

* பிற நிபந்தனைகள்
திட்ட முன்மொழிபவருக்கு வழங்கப்பட்ட அனுமதி அல்லது தடையில்லாச் சான்றிதழை மாற்ற முடியாது மேலும் அது வழங்கப்பட்ட காலத்திற்கு மட்டுமே பொருந்தும். நீர்நிலைகளின் செயல்பாட்டுப் பகுதியில் நீர்வளத் துறை நீர்ப்பாசனத்தை மேற்கொண்டால், பாசனத்திற்கான நடைமுறையில் உள்ள விதிகளின்படி நீர்வளத் துறையின் முழு விருப்பத்தின் பேரில் மூடப்படும். தகுதிவாய்ந்த அதிகாரியிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற்றவுடன், சம்பந்தப்பட்ட திட்ட முன்மொழிபவருக்கும் நிர்வாகப் பொறியாளருக்கும் இடையே தேவையான அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை விதிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்படும். நீர்நிலைகளின் நிலை பாதிக்காத வகையில் வளர்ச்சித் திட்டங்கள் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்பட வேண்டும். திட்ட முன்மொழிபவர் மற்றும் தடையில்லாச் சான்றிதழை வழங்கும் அதிகாரிகள் நீர்நிலைகளின் நிலை எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

The post வளர்ச்சி திட்டங்களுக்காக நீர்நிலைகள், நீர்நிலை புறம்போக்குகளை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வழங்க வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழ்நாடு அரசு வெளியிட்டது appeared first on Dinakaran.

Read Entire Article