டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஐஐடி திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்), ஐஐடி பாலக்காடு (கேரளா), ஐஐடி பிலாய் (சத்தீஸ்கர்), ஐஐடி ஜம்மு (ஜம்மு – காஷ்மீர்), ஐஐடி தார்வாட் (கர்நாடகா) ஆகிய புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவு 2025-26 முதல் 2028-29 வரையிலான நான்கு ஆண்டுகளுக்கு 11,828.79 கோடி ரூபாய் ஆகும்.இந்த ஐஐடிகளில் 130 ஆசிரியப் பணியிடங்களை உருவாக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
தொழில்துறைக்கும், கல்வித்துறைக்கும் இணைப்பை வலுப்படுத்த ஐந்து புதிய அதிநவீன ஆராய்ச்சி பூங்காக்கள் அமைக்கப்பட உள்ளன.இந்த ஐஐடி-க்களில் மாணவர் எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 6500-க்கும் கூடுதலாக அதிகரிக்கப்படும். இதன் மூலம் முதல் ஆண்டில் 1364 மாணவர்கள், 2-ம் ஆண்டில் 1738 மாணவர்கள், 3-ம் ஆண்டில் 1767 மாணவர்கள் மற்றும் 4-ம் ஆண்டில் 1707 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.புதிய கட்டுமானப் பணிகள் நிறைவடைந்ததும், இந்த ஐந்து ஐஐடிகளிலும் தற்போதைய மாணவர் எண்ணிக்கையான 7,111 என்பது 13,687 ஆக அதிகரிக்கும். அதாவது 6,576 மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்படுவார்கள். இதன் மூலம் மொத்த இடங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
மாணவர்களின் எண்ணிக்கையையும், வசதிகளையும் அதிகரித்து, ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்கள், ஆராய்ச்சியாளர்கள், துணைப் பணியாளர்கள் ஆகியோரை கூடுதலாக பணியமர்த்துவதன் மூலம் நேரடி வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்.ஐஐடி சேர்க்கை நாடு தழுவிய அளவில் நடைபெறுவதால், இந்த விரிவாக்கம் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மட்டுமல்லாமல் நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுக்கும் பயனளிக்கும்.
The post நாடு முழுவதும் உள்ள 5 புதிய ஐஐடிக்களை ரூ.11,828 கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்ய ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.