வல்லாரைக் கீரையின் நன்மைகள்!

3 hours ago 2

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

இன்றைய காலச்சூழலில் பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடு இல்லாமல் பெரும்பாலானோரை பாதிக்கும் ஒரு முக்கிய நோய் ஞாபக மறதி. இதனை தடுக்க நமது முன்னோர்கள் காலம்காலமாக தொன்றுதொட்டு பயன்படுத்தி வந்த ஒரு வகை. மூலிகை கீரை வகைதான் வல்லாரை.

இந்தக் கீரை ஈரப்பதம் நிறைந்த இடங்களில் நன்கு படர்ந்து வளரக்கூடிய தாவரமாகும் இதன் இலைகள் மூளை செயல்பாட்டினை ஊக்குவிப்பதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் மன அழுத்தத்தை குறைக்கவும் பயன்படுகிறது. இதில் காணப்படும் அசியேட்டிகாசிட் மற்றும் மேடிக்காசோசைடு போன்ற மூலக்கூறுகள் இதன் மருத்துவ பண்புகளுக்கு காரணமாக திகழ்கிறது.

இது பண்டைய காலத்திலிருந்து. ஆன்மிகம் மற்றும் மருத்துவ பயன்பாட்டிற்காக ஆசிய நாடுகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகளவில், இது இந்தியா, இலங்கை, தாய்லாந்து, மலேசியா மற்றும் ஆப்பிரிக்கா உள்ளிட்ட. பல்வேறு நாடுகளில் காணப்படுகிறது.

வல்லாரையின் அறிவியல் பெயர்

சென்டில்லா ஆசியாடிக்கா (centella Asiatica) என்பதாகும். இதன் இலைகள் செடியின் இருபுறமும் மெல்லிய வட்ட வடிவில் காணப்படும். இதில் சிறிய வெள்ளை அல்லது இளஞ்சிவப்பு நிற பூக்கள் காணப்படும். இதில் பெக்டிக் அமிலம் உள்ளதால் இலைகள் சற்று கசப்பு சுவையுடன் இருக்கும். ஆனாலும் வல்லாரைக் கீரை இனிப்பு, துவர்ப்பு, புளிப்பு மற்றும் கசப்பு சுவை கலந்து காணப்படும் ஒருவகை சிறப்பு தன்மை வாய்ந்த கீரையாகும். இக்கீரை பல்வேறு நாடுகளில் காணப்பெற்றாலும் இது இந்தியாவை தாயகமாக பெற்றது.

வல்லாரையில் காணப்படும் சத்துகள்

இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் மக்னீசியம், பாஸ்பரஸ் இக்கீரையில் நிறைந்திருக்கும். மேலும் வைட்டமின்கள் ஏ,பி,சி அதிக அளவில் இக்கீரையில் உள்ளது. வல்லாரையில் பீட்டாகரோட்டீன் அசியேட்டிகாசிட், மேடிக்காசோசைடு, ஃபிளேவோனாய்டுகள் போன்ற பல்வேறு மூலங்கள் இதில் காணப்படுகின்றன.

வல்லாரையின் மருத்துவ குணங்கள்

மூளை மற்றும் மனநலம் காப்பதில் வல்லாரை சிறந்து விளங்குகிறது. நினைவாற்றலை அதிகரித்து கவனம் செலுத்தும் திறனை மேம்படுத்த உதவுகிறது. குறிப்பாக அல்சைமர் மற்றும் மூளை நரம்பியல் சீர்குலைவுகளை தடுக்க பயன்படுகிறது. தோல் நோய்களை குணப்படுத்துவதில் வல்லாரை நன்கு உதவுகிறது. குறிப்பாக இதில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடண்டுகள் செல் அழிவதை தடுத்து வயது மூப்பினை தள்ளிப்போட உதவுகிறது.

மேலும் வைட்டமின் சி வல்லா ரையில் நிறைந்து உள்ளதால் தோல் சார்ந்த அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வாக வல்லாரை திகழ்கிறது. இரும்புச்சத்து இக்கீரையில் நிறைந்து காணப்படுவதினால் ரத்தத்தை சுத்தப்படுத்த உதவும். ரத்த சோகையை போக்க உதவும். இதில் கால்சியம் செரிந்து உள்ளதால் உடல் சோர்வு, நரம்பு தளர்ச்சி மற்றும் கெட்ட கொழுப்புகளை அகற்றி இதயத்தை பாதுகாக்கவும் வல்லரரை பயன்படுகிறது.

செரிமான பிரச்னையை சரி செய்யவும் வயிற்றுப்புண் பிரச்னையை தடுக்கவும் வல்லாரை நல்ல மருந்தாக பயன்படுகிறது. வல்லாரை இயற்கையாகவே குளிர்ச்சித் தன்மை கொண்டு இருப்பதனால் உடல் வெப்பத்தை குறைத்து சுறுசுறுப்பினை அளிக்கிறது. கல்லீரல் பலம்பெற, மஞ்சள்காமாலை நோய்க்கு மருந்தாக, மூட்டு வலி, இருமல், காய்ச்சல், காசநோய், தலைவலி மற்றும் மார்புச்சளி போன்ற பல்வேறு நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கினை வல்லாரை வகிக்கிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த கீரைக்கு தமிழ் மரபிலும் மருத்துவத்திலும் சிறப்பு உண்டு என்பதை கீழ்க்கண்ட வரிகளில் உணரலாம்.தோல் நோய் தீர்க்கும் மூலிகை நோய் நசிக்கும் வல்லாரை கண்டவர் வாழ்நாளில் மறக்கா வல்லறி தந்தது. ஆக வல்லாரை தாவர உலகில் மறைமுக புதையலாக விளங்குகிறது. இதன் மருத்துவ குணங்கள் மனித குலத்துக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது. ஆகையால் வல்லாரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அறிவு திறனை பெருக்கிக் கொள்ளுங்கள்.

வல்லரைக் கீரையை பயன்படுத்தும் முறை

பாசிப்பருப்புடன் சேர்த்து வாரத்தில் ஒருவேளை உட்கொள்ளலாம்.. குறிப்பாக உட்கொள்ளும் அளவில் மிக கவனம் செலுத்த வேண்டும். அளவு அதிகமானால் மூளை செயல்பாடு அதிகரித்து பின் விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.வல்லாரை சாற்றினை தேன் மற்றும் மோர் கலந்து 3:1 என்ற விகிதத்தில் வாரம் ஒருமுறை அருந்தலாம். வல்லரைப் பொடியாகவும் செய்து உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

The post வல்லாரைக் கீரையின் நன்மைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article