வல்லம் பகுதியில் மழையில் சாய்ந்த அறுவடைக்கு தயாரான நெல்கதிர்கள்

2 weeks ago 2

வல்லம், ஜன.22: தஞ்சை மாவட்டம் வண்ணாரப்பேட்டை, 8 நம்பர் கரம்பை பகுதியில் நெல் பழம் நோய் தாக்குதல் மற்றும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாய்ந்து சேதமான நெல்பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். தஞ்சை மாவட்டம் 8நம்பர் கரம்பை, வண்ணாரப்பேட்டை பகுதிகளில் சி.ஆர்.1009, கோ-51, கோ-50 ரகங்களை சாகுபடி செய்திருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தில் பெய்த மழையில் கோ 50, 51 ரக சம்பா பயிர்களில் அதிகளவில் நெல் பழம் நோய் தாக்குதல் ஏற்பட்டது. இதனால் நெல் கருப்பு நிறத்தில் மாறியது. மேலும் கடந்த 2 மாதங்களாகவே பனிப்பொழிவு அதிகம் இருந்து வருகிறது. காலை மற்றும் மாலை வேளையில் பனிப்பொழிவு அதிகம் இருப்பதால் பயிர்களில் பூச்சித்தாக்குதல்களும் ஏற்பட்டது.

இருப்பினும் விவசாயிகள் களைக்கொல்லி, உரம் தெளித்து பயிர்களை காப்பாற்றினர். இன்னும் 15 நாட்களில் அறுவடை முடித்து விடலாம் என்று விவசாயிகள் நினைத்திருந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் சாகுபடி பயிர்கள் அனைத்து வயலில் சாய்ந்து கிடக்கிறது. ஈரப்பதம் அதிகம் இருப்பதால் சாய்ந்த பயிர்கள் முளைவிட்டு விடும். இதனால் மகசூல் பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நெல் பழம் நோய் தாக்குதல் தென்பட்டது. இருப்பினும் இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடை செய்து விடலாம்.

அதிக பாதிப்பு இருக்காது என்று நினைத்து இருந்தோம். ஆனால் தற்போது 2 நாட்களாக பெய்த மழையில் பாதிக்கு பாதி நெல்பயிர்கள் வயலில் சாய்ந்துவிட்டது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டு இருந்தால் முக்கால் ஏக்கர் அளவிற்கு நெல் பயிர்கள் சாய்ந்து கிடக்கிறது. இதனால் நிச்சயம் மகசூல் பாதிப்பு ஏற்படும். மேலும் வயல் ஈரப்பதமாக இருப்பதால் அறுவடையும் செய்ய முடியாது. ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
எனவே வண்ணாரப்பேட்டை, 8ம் நம்பர் கரம்பை பகுதிகளில் வயிலில் சாய்ந்து கிடக்கும் நெற்பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

The post வல்லம் பகுதியில் மழையில் சாய்ந்த அறுவடைக்கு தயாரான நெல்கதிர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article