வல்லப்பாக்கத்தில் மழைநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் கால்வாயாக மாறிய அவலம்: ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வலியுறுத்தல்

2 months ago 17

வாலாஜாபாத்: கடைகள், உணவகங்களில் இருந்து குப்பை கொட்டப்படுவதால் வல்லப்பாக்கம் மழைநீர் வடிகால்வாய் கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது. எனவே, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, கால்வாயை தூர்வார வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டார பகுதி முழுவதும் வளர்ந்து வரும் குடியிருப்பு பகுதிகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.

இவை மட்டுமின்றி வாலாஜாபாத்தில் உள்ள காவல் நிலையம், ரயில் நிலையம், நூலகம், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கருவூலக அலுவலகம், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள், தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன. வாலாஜாபாத்தை சுற்றியுள்ள 50க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கானோர் வாலாஜாபாத் வந்துதான் காஞ்சிபுரம், சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், செங்கல்பட்டு, படப்பை, ஒரகடம், தாம்பரம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளில் செயல்படும் அரசு அலுவலகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நாள்தோறும் சென்று வருகின்றனர்.

இந்நிலையில், எப்போதும் பரபரப்பாகவே காணப்படும் வாலாஜாபாத் மையப் பகுதியில் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் வல்லப்பாக்கம் மழைநீர் வடிகால்வாய் உள்ளது. இந்த கால்வாய் பாலாற்று படுகையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது மழைநீர் வல்லப்பாக்கம் ஏரியில் நிரம்பும் அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ளது. வல்லப்பாக்கம் ஏரி நிரம்பிய பின்பு அருகாமையில் உள்ள நத்தாநல்லூர், புளியம்பாக்கம், உள்ளாவூர் உள்ளிட்ட பல்வேறு ஏரிகளுக்கு மழைநீர் செல்லும்.

இந்நிலையில், தற்போது இந்த வல்லப்பாக்கம் கால்வாய் வாலாஜாபாத் நகர் பகுதியின் மையத்தில் செல்வதால், கால்வாயின் இருபுறம் உள்ள வீடுகளில் உள்ளவர்கள் இந்த கால்வாயை கழிவுநீர் கால்வாயாக மாற்றிவிட்டனர். குறிப்பாக வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் இந்த கால்வாயில் விடப்படுகிறது. மேலும், வாலாஜாபாத் பகுதியில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் இந்த கால்வாயில்தான் கொட்டப்படுகின்றன.

இதனால், தற்போது வெளியேற வழியின்றி கால்வாய் நிரம்பி பல்வேறு இடங்களில் கழிவுநீர் சாலைகளில் ஓடும் அளவிற்கு காணப்படுகிறது. இதுகுறித்து அங்குள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் பாலாற்று படுகையிலிருந்து வல்லபாக்கம் வரை செல்லும் மழைநீர் கால்வாய் பொதுப்பணி துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கால்வாய் 25 அடிக்கு மேலாக அகலமும், இரண்டு கிலோமீட்டர் நீலமும் கொண்டது.

இந்த கால்வாய் மூலம் மழைக்காலங்களில் ஏரிகள், குளங்கள், குட்டைகள் நிரம்பி நிலத்தடிநீர் மட்டுமின்றி விவசாயத்திற்கும், கால்நடைகளுக்கும் வாழ்வாதாரமாக திகழும் வகையில் முன்னோர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். காலப்போக்கில் வல்லப்பாக்கம் கால்வாய் கழிவுநீர் செல்லும் கால்வாயாக உருமாறியது. தற்போது, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் அனைத்தும் பாலாற்றுப்படுகையில் கலக்கின்றன. இதனால், குடிநீர் ஆதாரமாக விளங்கும் பாலாறும் தற்போது பாழாகும் நிலையில் காணப்படுகிறது.

இதுபோன்ற நிலையில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கால்வாயை தூர்வார வேண்டும் என தொடர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் வலியுறுத்தியும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், இந்த வல்லப்பாக்கம் கால்வாயை பல்வேறு இடங்களில் இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், வாலாஜாபாத் சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளில் ஏரிகளின் வாழ்வாதாரமாக விளங்கும் இந்த வல்லபாக்கம் மழைநீர் வடிகால்வாய் மீண்டும் மழைநீர் மட்டும் செல்லும் அளவிற்கு சீரமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும்’ என்றனர்.

* நோய் பரவும் சூழல்
வாலாஜாபாத் பாலாற்றுப் படுக்கையில் இருந்து செல்லும் வல்லப்பாக்கம் கால்வாயை மழைக்காலத்திற்கு முன்பு பொதுப்பணித்துறை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும். காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வேகவதி ஆற்று பகுதியில் இருபுறமும் இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றியதுபோன்று வாலாஜாபாத்திலும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த கால்வாய் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் தூர்வாரபட்டது.

வாலாஜாபாத் பேரூராட்சிமன்ற தலைவர் இல்லாமல்லிஸ்ரீதர் பருவமழைக்கு முன்பு கால்வாயை தூர்வார வேண்டும் என ஏற்கனவே 2 முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். வாலாஜாபாத் பாலாற்று படுகையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது வல்லப்பாக்கம் கால்வாய் தூர்வாரப்படாத நிலையில் வாலாஜாபாத் நகர் முழுவதும் மழை நீர் சூழ்ந்து மக்கள் கடும் சிரமப்பட்டனர். கால்வாய் பல்வேறு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் குறுகி காணப்படும் நிலையில் கழிவுநீர் சாலையில் வழிந்தோடும் அவல நிலையால் நோய்தொற்று பரவும் சூழல் நிலவுகிறது.

The post வல்லப்பாக்கத்தில் மழைநீர் கால்வாயில் குப்பைகள் கொட்டப்படுவதால் கழிவுநீர் கால்வாயாக மாறிய அவலம்: ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர்வார வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article