வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்றிய கடலோர காவல்படை

4 weeks ago 3

சென்னை: வங்கக் கடலில் வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் பத்திரமாக மீட்டனர். இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ராணி அப்பக்கா என்ற கப்பலில், வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கடலில் ஆமை ஒன்று மீனவர்களால் தூக்கி வீசப்பட்ட வலையில் சிக்கி நீந்த முடியாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை கடலோர காவல்படை வீரர்கள் கண்டனர். உடனடியாக அவர்கள் கப்பலில் இருந்த உயிர்காக்கும் படகை கீழே இறக்கி, அதன் மூலம் ஆமை இருந்த இடத்தை நோக்கி செலுத்தி அதை பிடித்தனர்.

பின்னர் அதனை சுற்றி இருந்த வலைப்பின்னல்களை அறுத்து, ஆமையை விடுவித்து பத்திரமாக கடலுக்குள் விட்டனர். வீரர்களின் இந்த செயல், ஒன்றிய அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஒலிவியா என்ற நடவடிக்கைக்கு சான்றாக திகழ்கிறது. ஒலிவியா நடவடிக்கை என்பது கடல் ஆமைகளையும் அவற்றின் இனப்பெருக்க தலங்களையும் பாதுகாக்கும் நடவடிக்கையாகும். இந்திய கடலோர காவல்படை, நாட்டின் கடற்பகுதி, கடல் வளங்கள், மீனவர்கள் ஆகியோரை பாதுகாப்பதுடன், கடல் வாழ் உயிரினங்களையும் அச்சுறுத்தலில் இருந்து மீட்டல், கடல் மாசுபடுதலை தடுத்தல், மாசு ஏற்பட்டால் அதனை அகற்றுதல் போன்ற பணிகளையும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

The post வலையில் சிக்கி உயிருக்கு போராடிய ஆமையை காப்பாற்றிய கடலோர காவல்படை appeared first on Dinakaran.

Read Entire Article