சென்னை: அடையாறு சார்பதிவகம் 1.6.1982 அன்று தோற்றுவிக்கப்பட்டு இயங்கி வருகிறது. 2023-24 நிதியாண்டில் மொத்தம் 4955 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு, அதன்மூலம் ரூ.295.53 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் இதுவரை 3680 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டு அதன்மூலம் ரூ.190.57 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. சார்பதிவாளர் அலுவலகங்களில் தொழில்நுட்ப மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நேற்று திருவான்மியூர், எல்பி ரோடு, காமராஜ் நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய கட்டிடத்தில் முதல்முறையாக நவீன வசதிகளுடன் கூடிய மாதிரி சார்பதிவாளர் அலுவலகம் (அடையாறு சார்பதிவாளர் அலுவலகம்) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோரால் குத்துவிளக்கேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த அலுவலகத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறைகள், வைபை இணைய வசதிகள், நூலக வசதி உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, எம்எல்ஏக்கள் அசன் மவுலானா, அரவிந்த் ரமேஷ், பத்திரப்பதிவு தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே ஆகியோர் கலந்து கொண்டனர்.
The post நவீன வசதிகளுடன் கூடிய அடையாறு மாதிரி சார்பதிவாளர் அலுவலகம்: அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.மூர்த்தி திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.