அடிலெய்டு,
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது.
அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.
முன்னதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் போட்டியில் சதம் அடித்து அசத்தியதால் மீண்டும் பார்முக்கு திரும்பியதாக ரசிகர்கள் கருதினர். ஆனால் 2-வது 7,11 ரன்கள் அடித்து மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதனால் மீண்டும் அவர் மீது விமர்சனங்கள் விழுந்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் இயற்கையாகவே இருக்கும் அதிகப்படியான பவுன்ஸை சமாளிப்பதற்காக விராட் கோலி பேக் புட்டில் பயிற்சிகளை எடுப்பதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இப்படி பயிற்சி எடுப்பதால் விராட் கோலி மீண்டும் கம்பேக் கொடுப்பார் என்றும் ஹர்பஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விராட் கோலியின் பயிற்சியை நேரில் பார்த்த பின் இது குறித்து பேசியது பின்வருமாறு:-
"இன்று விராட் கோலியை வலைப்பயிற்சியில் நான் பார்த்தேன். அவருடன் நான் நிறைய கிரிக்கெட்டையும் விளையாடினேன். பொதுவாக அவர் முன்னங்காலில் (பிரண்ட் புட்) விளையாடக் கூடிய வீரர். இந்திய மண்ணில் குறைவான பவுன்ஸ் இருக்கும் என்பதால் நீங்கள் முன்னங்காலில் விளையாடுவது சரியாக இருக்கும். ஆனால் பாண்டிங், ஸ்டீவ் வாக், லாங்கர், ஹைடன் ஆகியோர் தங்கள் நாட்டில் இருக்கும் அதிகப்படியான பவுன்ஸ் காரணமாக பின்னங்காலில் (பேக் புட்) விளையாடுவார்கள்.
ஆஸ்திரேலியாவில் நீங்கள் பவுன்சை சமாளித்து விளையாடும் வீரராக இருக்க வேண்டும். அதற்கு பின்னங்காலில் நீங்கள் நல்ல வீரராக இருக்க வேண்டும். அதைத்தான் விராட் கோலி பயிற்சி எடுக்கிறார். இன்று நான் பார்த்த வரையில் அவர் நிறைய பந்துகளை பின்னங்காலில் எதிர்கொள்கிறார். 3வது போட்டி நடைபெறும் காபா மைதானம் வித்தியாசமானதாக இருக்கும்.
அங்கே அவர் அதிகப்படியான வேகம் மற்றும் பவுன்ஸ் ஆகியவற்றை எதிர்கொள்ள வேண்டும். எனவே பின்னங்கால் ஆட்டத்தை அவர் தன்னுடைய பேட்டிங்கில் சேர்ப்பது அவசியமாகும். அதில் தற்போது விராட் கோலி வேலை செய்வதை பார்ப்பது நன்றாக இருக்கிறது. விராட் கோலி எப்போதுமே பின்னடைவை சந்திக்கும்போது கம்பேக் கொடுக்கக்கூடிய வீரர் என்பது எனக்கு உறுதியாக தெரியும்" என்று கூறினார்.