
சென்னை,
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், படிப்படியாக கடலிலேயே வலுவிழக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு 450 கி.மீ தொலைவில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் கிழக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்துள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்திற்குப் பிறகு படிப்படியாக கடலிலேயே வலுவிழக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்றோ அல்லது நாளையோ வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வறண்ட காற்று உதவியுடன் மீண்டும் தமிழக பகுதிகளை ஓரிரு நாட்களில் அடையக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர்.
இதன்மூலம் தமிழக பகுதிகளில் பரவலாக வருகிற 24-ந் தேதிக்கு மேல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், இந்த தாழ்வு பகுதி வலுவிழந்து 26-ந் தேதிக்கு பிறகு வங்கக்கடலில் மேலும் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சாத்தியமான சூழல் நிலவி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.