பல்கலைக்கழக மானியக்குழு புதிய வரைவு மூலம் மாநில அரசின் அதிகாரத்தை பறிக்க முயற்சி நடக்கிறது. பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்கள் நியமனம் செய்வதற்கு ஆளுநருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய நெறிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. மாநில முதல்வர்கள் சிபாரிசு செய்யும் மூன்று பேரில் ஒருவரை ஆளுநர் துணை வேந்தராக நியமிக்கும் வழக்கத்தை இது மாற்றி அமைக்கிறது. இதனால் மாநில அரசுகளின் உரிமை பறிபோகிறது. கொல்லைப்புறம் வழியாக மாநில அரசியலுக்குள் ஆர்.எஸ்.எஸ் நுழையும் முயற்சிக்கு அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.
மாநில பட்டியலுக்கு கல்வி வர வேண்டும் என்பதே திமுக மற்றும் கூட்டணி கட்சியின் நோக்கம். இதை சிதைக்கும் ஆர்.எஸ்.எஸ். நோக்கம் ஒரு போதும் நிறைவேறாது என்று டெல்லியில் யுஜிசி வரைவை எதிர்த்து திமுக மாணவரணி சார்பில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதே போல் மாநில உயர்கல்வி அமைச்சர்கள் கலந்து கொண்ட மாநாடு பெங்களூருவில் நடந்தது. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஜார்கண்ட், தெலங்கானா, இமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பல்கலைக்கழகங்களில் துணை வேந்தரை நியமிக்கும் அதிகாரத்தை ஆளுநருக்கு வழங்கும் யுஜிசி நெறிமுறைகளை வாபஸ் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் பேராசிரியர்கள் நியமனம், சம்பளம், ஓய்வூதியம் உள்பட அனைத்து வசதிகளையும் மாநில அரசு செய்து வருகிறது. ஆனால் துணைவேந்தர்கள் நியமனத்தை பல்கலைக்கழக மானிய குழு மற்றும் ஒன்றிய அரசு நியமிக்கும் வகையில் வரைவு வெளியிடப்பட்டுள்ளது. துணைவேந்தர் நியமன அதிகாரம் மாநிலத்திடம் மட்டுமே இருக்க வேண்டும்.
கல்வி பணி சாராத நபர்களை துணைவேந்தராக நியமிப்பதற்கு வழி வகை செய்யும் புதிய விதிகளை ரத்து செய்ய வேண்டும். துணை வேந்தர் பதவிக்கான கல்வி தகுதியில் திருத்தம் செய்திருப்பதை ரத்து செய்ய வேண்டும். உதவி பேராசிரியர் நியமனம், பகுதி நேர, சிறப்பு பேராசிரியர் உள்ளிட்ட நியமனங்களில் மேற்கொண்டுள்ள முடிவுகளை யுஜிசி திரும்ப பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 15 தீர்மானங்களை பெங்களூருவில் நடந்த மாநாட்டில் நிறைவேற்றியுள்ளனர்.
யுஜிசியின் புதிய நெறிமுறைகள் தேசியக்கல்வி கொள்கையை புறவழியாக அமல்படுத்துவதையே பிரதிபலிக்கிறது. மாநில அரசின் உறுப்பினர் ஒப்புதல் இல்லாமல் துணைவேந்தர் நியமனம் என்பது பல்கலை நிர்வாகத்தில் மாநில சுயாட்சியை சிதைக்கும் முயற்சி. சட்டப்பேரவையின் மூலம் மாநில அரசு பல்கலைக்கழகங்களை நிறுவியுள்ளது.
எனவே மாநில பல்கலைகள் மீது மாநில அரசுக்கு தான் முதல் உரிமை இருக்கிறது. ஜனநாயக முறையின் உயர்கல்வியை உருவாக்க மாநில அரசுடன் ஒன்றிய அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு உயர்கல்வி அமைச்சர் கோவி.செழியன் வலியுறுத்தியுள்ளார். பல்கலைக்கழக மானியக்குழுவின் புதிய வரைவில் உள்ள நெறிமுறைகளுக்கு ஒட்டுமொத்தமாக அனைத்து மாநிலங்களிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது. எனவே யுஜிசி தனது புதிய வரைவு திட்டத்தை திரும்ப பெற்றே ஆக வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
The post வலுக்கிறது எதிர்ப்பு appeared first on Dinakaran.