ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம்

3 hours ago 3

விருதுநகர்,பிப். 7: விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம் சிஐடியு மாவட்ட செயலாளர் தேவா, ஏஐடியுசி மாவட்ட தலைவர் சமுத்திரம், எல்பிஎப் மாவட்ட தலைவர் மாடசாமி தலைமையில் நடைபெற்றது. அதில் தொழிலாளர் விரோத சட்ட தொகுப்புகள் நான்கையும் திரும்ப பெற வேண்டும். மக்களை காவு வாங்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். விவசாயிகளின் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஊதியம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய்ய வேண்டும். அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 30 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். நிரந்தர பணியிடங்களை அவுட்சோர்சிங் முறையில் நிரப்புவதை ரத்து செய்ய வேண்டும். கார்ப்ரேட் முதலாளிகளுக்கு குறைக்கப்பட்ட செல்வ வரியை உயர்த்த வேண்டும். முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு நிதியை உருவாக்க வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, தேசிய சுகாதார திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். நூறு நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்காமல் முழுமையான நிதி ஒதுக்க வேண்டுமென வலியுறுத்தியும், பொதுமக்கள், தொழிலாளர், விவசாயிகள் நலனை புறக்கணிக்கும் ஒன்றிய நிதிநிலை அறிக்கையை எதிர்த்து, நிதிநிலை நகலை கிழித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

The post ஒன்றிய பட்ஜெட்டை கண்டித்து விருதுநகரில் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article