மும்பை:
அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வெளிநாடுகளுக்கான வரி விதிப்பு நடவடிக்கையை தொடங்கியிருப்பது சர்வதேச அளவில் வர்த்தக போர் குறித்த கவலைகளை எழுப்பி உள்ளது.
கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பெரும்பாலான பொருட்களுக்கு 25 சதவீத வரியும், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீத வரியும் விதிக்கப்படும் என டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த வரிவிதிப்பு நாளை முதல் அமலுக்கு வர உள்ளது. இதற்கு அந்த நாடுகள் எதிர்வினையாற்றத் தொடங்கி உள்ளன.
சர்வதேச அளவில் எழுந்துள்ள இந்த விவகாரம் பங்குச்சந்தைகளில் எதிரொலித்தது. உலகளாவிய சந்தைகளில் நிலையற்ற தன்மை காணப்பட்டது. இந்திய சந்தைகளிலும் இதன் தாக்கம் கடுமையாக இருந்தது. இதனால் பங்குச்சந்தை குறியீடுகள் சரிவடைந்தன.
மும்பை பங்குச்சந்தையில் குறியீட்டெண் சென்செக்ஸ் 319.22 புள்ளிகள் சரிந்து, 77,186.74 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 749.87 புள்ளிகள் வரை சரிந்து 76,756.09 புள்ளிகளுக்கு சென்றது.
இதேபோல் தேசிய பங்குச்சந்தையிலும் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது. வர்த்தகத்தின் நிறைவில் குறியீட்டெண் நிப்டி 121.10 புள்ளிகள் சரிந்து, 23,361.05 புள்ளிகளாக இருந்தது.
மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனங்களில் லார்சன் & டூப்ரோ, டாடா மோட்டார்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர், ஏசியன் பெயிண்ட்ஸ், ஐடிசி, பவர் கிரிட், என்டிபிசி மற்றும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பெரிய அளவில் பின்தங்கியிருந்தன.
பஜாஜ் பைனான்ஸ், மஹிந்திரா & மஹிந்திரா, பஜாஜ் பின்சர்வ், பாரதி ஏர்டெல் மற்றும் மாருதி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்வடைந்தன.
ஆசிய சந்தைகளில், சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் சந்தைகள் கடுமையாக சரிந்தன. ஐரோப்பிய சந்தைகளும் சரிவடைந்தன. அமெரிக்க சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவுடன் முடிவடைந்தன.
உலகளாவிய சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.15 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 76.50 டாலராக இருந்தது.