வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் தேசிய கல்விக்கொள்கை வேண்டாம்: உள்துறை அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி

1 week ago 3

சென்னை: ‘வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம்’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பாஜ தலைமையில் மத்தியில் அமைந்துள்ள ஆட்சி, மதம் சார்ந்த விஷயங்களில் அதிகம் ஆர்வம் கொண்டு, அது சார்ந்த விஷயங்களை கல்வியில் புகுத்தவும், இந்தி மொழியையும் கல்வியில் புகுத்தவும் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருவதாக அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தும், அதற்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர். ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கையிலும் சாதி, மதம் சார்ந்த விஷங்கள் இடம்பெற்று, பழைய காலத்துக்கே மாணவ, மாணவியரை பின்னோக்கி இழுக்கும் தன்மை கொண்டது என்றும் கருத்துதெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சரான அமித்ஷா நேற்று முன்தினம் பேசும்போது, வர்ணாசிரமத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கை இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது எக்ஸ் தள செய்தியில் கூறியுள்ளதாவது: மோடி அரசின் தேசிய கல்விக் கொள்கை சமஸ்கிருதத்தை முக்கிய தூணாகக் கொண்ட இந்திய அறிவு முறைக்கு வலுவான முக்கியத்துவம் அளிக்கிறது என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். இதைத்தான் நாங்களும் தெரிவித்து வருகிறோம். வர்ணாசிரமத்தை உயர்த்தி பிடிக்கும் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட தேசிய கல்விக் கொள்கை எங்களுக்கு வேண்டாம் என்கிறோம். இந்தியை முன்னால் அனுப்பி பின்னால் சமஸ்கிருதத்துக்கு மணிகட்டி அனுப்புவதுதான் தேசிய கல்விக் கொள்கை என்கிறோம். வர்ணாசிரமத்தை உயர்த்திப் பிடிக்கும் தேசிய கல்விக் கொள்கை வேண்டாம்.

The post வர்ணாசிரமத்தை தூக்கிப் பிடிக்கும் தேசிய கல்விக்கொள்கை வேண்டாம்: உள்துறை அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article