* அதிகபட்சமாக வேளச்சேரியில் 3,12,912
* குறைந்தபட்சமாக எழும்பூரில்1,76,917
* 53,359 வாக்காளர்கள் பெயர்கள் புதிதாக சேர்ப்பு
* 26,005 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம்
சென்னை : வாக்காளர் பட்டியலை புதுப்பிக்கும் வகையில் நேற்று வெளியிடப்பட்ட சென்னை மாவட்டத்துக்கான வரைவு வாக்களர் பட்டியலின் அடிப்படையில், சென்னை மாவட்டத்தில் மொத்தம் 39.52 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக வேளச்சேரியில் 3.12 லட்சம் வாக்காளர்களும், குறைந்தபட்சமாக எழும்பூரில் 1.76 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் பட்டியல் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அதற்கு முன்பாக, வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடுவது நடைமுறையாக உள்ளது. அந்த வகையில், வரும் ஜனவரி 1ம் தேதி, 18 வயது நிறைவு அடையும் நாளை அடிப்படையாகக் கொண்டு புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இதற்காக பழைய வாக்காளர் பட்டியல் திருத்தப்பட வேண்டும். இந்த திருத்த செயல்களை எளிதாக்க நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டசபை தொகுதிகளுக்கான 2025ம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை, சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் பிரித்விராஜ் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் துறை அலுவலர் (தேர்தல்) பி.சுரேஷ் மற்றும் திமுக சார்பில் சந்துரு, அதிமுக சார்பில் பாலகங்கா, காங்கிரஸ் சார்பில் சந்திரமோகன், எஸ்.கே.நவாஸ், தேமுதிக சார்பில் நல்லதம்பி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் கருணாநிதி உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் கலந்து ெகாண்டனர்.
இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் 2025ம் ஆண்டு ஜன.1ம் தேதி தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு 2025ம் ஆண்டின் சிறப்பு சுருக்க முறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, இச்சுருக்க முறை திருத்தம் தொடர்பாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.
பொதுமக்கள் தங்களது பெயர்கள் மற்றும் குடும்பத்தினர் பெயர்கள் குறித்த விவரங்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனவா அல்லது இல்லையா என்பது குறித்து சரிபார்த்துக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாமல் உள்ளவர்கள் மற்றும் 2025ம் ஆண்டு ஜன.1ம் தேதியன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் (2007ம் ஆண்டு ஜன.1ம் தேதிக்கு முன்பாக பிறந்தவர்கள் மற்றும் 17 வயது நிரம்பி 18 வயது பூர்த்தி அடையும் நிலையில் உள்ளவர்களும்) படிவம்-6ஐ பூர்த்தி செய்து அளிக்கலாம்.
பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம்-7ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்ற தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடிபெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம்-8 ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலுவலரின் அலுவலகத்தில் இன்று முதல் நவ.28ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் நவ.16, 17, 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. அந்த முகாம் நாட்களையும் படிவங்கள் 6, 6A, 7 மற்றும் 8 வழங்க பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் பொதுமக்கள் http://voters.eci.gov.in/ இணையதளம் மூலமாகவும் தங்களுடைய பெயர்கள் சேர்த்தல் நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். சென்னை மாவட்டத்தில் 3,718 வாக்குச்சாவடிக அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
அதிகபட்சமாக பெரம்பூர் சட்ட மன்றத் தொகுதியில் 284 வாக்குச்சாவடிகளும். குறைந்தபட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு, மார்ச் 27ம் தேதி ஏற்கனவே வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,28,461, பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை 19,95,484, இதர வாக்காளர்களின் எண்ணிக்கை 1,199, மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 39,25,144 ஆகும்.
நடந்து முடிந்த தொடர் திருத்தத்தில் சென்னை மாவட்டத்தில் 19,41,271 ஆண் வாக்காளர்கள். 20,09,975 பெண் வாக்காளர்கள் மற்றும் 1,252 இதர வாக்காளர்கள் என மொத்தம் 39,52,498 வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும் 25,628 ஆண் வாக்காளர்கள், 27,669 பெண் வாக்காளர்கள் மற்றும் 62 இதர வாக்காளர்கள் என மொத்தம் 53,359 வாக்காளர்களின் பெயர்கள் புதியதாக பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும் 12,818 ஆண் வாக்காளர்கள், 13,178 பெண் வாக்காளர்கள் மற்றும் 9 இதர வாக்காளர்கள் என மொத்தம் 26,005 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளர் பட்டியலின்படி, வாக்காளர் எண்ணிக்கை குறைந்தபட்சமாக துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் 1,76,197 வாக்காளர்களும், அதிகபட்சமாக வேளச்சேரி சட்டமன்றத் தொகுதியில் 3,12,912 வாக்காளர்களும் உள்ளனர்.
ஜனநாயகத்தினை வலுப்படுத்த தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் வாக்காளர் பட்டியலில் இடம் பெற ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்பப்படுகிறார்கள்.
The post வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு சென்னை மாவட்டத்தில் 39.52 லட்சம் வாக்காளர்கள் appeared first on Dinakaran.