சென்னை: தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன் நேற்று காலை சென்னை, எழிலகத்தில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: வருகிற 15, 16, 17, 18 ஆகிய 4 நாட்களுக்கும் கனமழை இருப்பதாக வானிலை ஆய்வு மையம் இன்றைக்கு தெரிவித்து இருக்கிறது. அதுவும் குறிப்பாக, சென்னையை சுற்றியிருக்கும் மாவட்டங்களுக்கு அதிகப்படியான மழை இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்திருக்கிறது. அதற்கு வேண்டிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் எங்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.
அதன்படி, முன்னெச்சரிகை நடவடிக்கைகளை நாங்கள் எடுத்து வருகிறோம். இந்த மழையை எதிர்கொள்ள வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் இந்த அரசு எடுத்துக்கொண்டு இருக்கிறது. உதாரணத்துக்கு, திருச்சியில் ஏர்இந்தியா விமான பிரச்னை வந்த நேரத்தில் நம்முடைய துறையில் இருந்து திருச்சி மாவட்ட தலைவரிடம் சொல்லி 18 ஆம்புலன்ஸ், 3 தீயணைப்பு வண்டிகளை நாம் அனுப்பி அதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அதேபோன்று நேற்று முன்தினம் சென்னை அருகே நடந்த ரயில் விபத்தின்போது, 10 இடங்களில் கல்யாண மண்டபங்களை தயார்நிலையில் வைத்து, ஏதாவது ஒரு அசம்பாவிதம் ஏற்படும் என்று சொன்னால் அவர்களை தங்கவைப்பதற்கான வேலைகளையும் நாங்கள் செய்து வைத்திருந்தோம்.
20 பஸ்களையும் தயாராக வைத்து அவர்களை ஊருக்கு அனுப்பி வைக்கும் பணிகளையும் செய்திருந்தோம். அதேபோன்று வருகிற வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கு இந்த அரசாங்கம் தயாராக இருக்கிறது. தேசிய, மாநில பேரிடர் மீட்பு படையினரும் தயாராக உள்ளனர். பால், குடிநீர் உள்ளிட்ட உணவு பொருட்களை மழைக்கு முன்பாகவே தயாராக வைக்க அறிவுறுத்தியுள்ளோம். பொதுமக்களுக்கு உதவ தமிழ்நாடு முழுவதும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். நீர்வளத்துறை மூலம் நீர்நிலைகளை கவனித்து வருகிறோம். மாநில அவசர கால செயல்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்படும். பொதுமக்கள் எந்த நேரமும் தொடர்பு கொண்டு தங்கள் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
The post வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை மிக கனமழை எச்சரிக்கை அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்: கலெக்டர்களுக்கு வருவாய்த்துறை அமைச்சர் உத்தரவு appeared first on Dinakaran.