![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37942083-rishabhpant.webp)
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார். குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு இறுதியில் சாலை விபத்தில் சிக்கி பெரிய பாதிப்பை சந்தித்திருந்த ரிஷப் பண்ட் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பினார்.
அந்த வாய்ப்பிலும் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவரது இந்த கம்பேக் அனைவரது பார்வையையும் திரும்ப வைக்கும் வகையில் அமைந்தது. அந்த காரணத்தினால் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம்பிடித்து கோப்பையை வெல்ல உதவினார். மேலும் நடப்பாண்டு ஐ.பி.எல். தொடருக்காக அவரை லக்னோ அணி ரூ. 27 கோடிக்கு வாங்கி தங்களுடைய கேப்டனாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் 'ரிஷப் பண்ட் அறக்கட்டளை' என்னும் பெயரில் புதிய அறக்கட்டளை ஒன்றை தொடங்க உள்ளதாக பண்ட் அறிவித்துள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு:- "இன்று நான் இருக்கும் இடத்திற்கும் பெற்றுள்ள விஷயங்களுக்கும் கிரிக்கெட் எனும் அழகான விளையாட்டே காரணம். நான் பெற்றுள்ள அனைத்து விஷயங்களுக்கும் வாழ்க்கை எனக்கு கற்றுக்கொடுத்த பாடங்களே காரணம். இந்த இடத்தில் இருப்பதற்கு நான் அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன். சில வருடங்களுக்கு முன்பாக விபத்தை கடந்து வந்தது எனக்கு அதிக நன்றி உணர்வை கொடுத்தது. உங்களுடைய அன்பு, ஆசீர்வாதங்கள், ஆதரவுக்கு நன்றி.
வெற்றியையும் முயற்சியையும் ஒருபோதும் கைவிடாமல் தொடர்ந்து சிரிக்க வேண்டும் என்பதே வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்டப் பாடமாகும். தற்போது இதனை மக்களின் முகத்தில் கொண்டு வருவதே எனது இலக்கு. திருப்பி கொடுப்பதைப் பற்றி நான் நிறைய சிந்தித்தேன். அதைச் செய்வதற்கு இதுவே சரியான நேரம். என்னுடைய வணிக வருமானத்தில் 10 சதவீத தொகையை ரிஷப் பண்ட் அறக்கட்டளைக்கு அர்ப்பணிக்கிறேன். இது என்னுடைய கனவு திட்டம்" என்று கூறினார்.
அவரது இந்த அறிவிப்பு பல தரப்பினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.