![](https://media.dailythanthi.com/h-upload/2025/02/06/37959784-state-02.webp)
கோவை,
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்புக்கான ஆய்வை நடத்தாதது ஏன்? என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரிதான் என்று பா.ஜ.க. எம்.எல்.ஏ. வானதி சினிவாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து விஜய் கேட்பது சரியானதுதான். ஆனால் மத்திய அரசும், மாநில அரசும் நேர்க்கோட்டில் பயணிக்கிறது என்று அவர் கூறுகிறார். மாநில அரசு ஒரு காலத்திலும் மத்திய அரசுடன் நேர்க்கோட்டில் வரவே இல்லை. அதனால்தான் தமிழகத்திற்கு இத்தனை பிரச்சினைகள்.
சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்தலாம். பிகார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மாநில அரசே அதை நடத்த முடியும். ஆனால் வேண்டுமென்றே மத்திய அரசுதான் நடத்த வேண்டும் என்று பிரச்சினையை திசைதிருப்பும் வேலையை தி.மு.க. அரசு செய்கிறது."
இவ்வாறு வானதி சீனிவாசன் தெரிவித்தார்.