
மும்பை,
அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு வீரர்கள் அனைவருமே சிறப்பாக செயல்பட்டனர். இதன் முதல் 2 லீக் ஆட்டங்களில் விளையாடாத வருண் சக்ரவத்தி எஞ்சிய 3 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். லீக் சுற்றில் நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் கைப்பற்றியதும் அடங்கும். அது போக அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டிராவிஸ் ஹெட்டின் விக்கெட்டை கைப்பற்றி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.
முன்னதாக கடந்த 2021-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகம் ஆன வருண் ஆரம்ப காலங்களில் மிகவும் தடுமாற்றமாக செயல்பட்டார். அதன் காரணமாக அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர், கடந்த ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா கோப்பை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். அதனால் மீண்டும் இந்திய டி20 அணியில் தேர்வான வருண், அதில் அசத்தியதால் ஒருநாள் கிரிக்கெட்டிலும் விளையாடும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பில் அபாரமாக செயல்பட்டு இந்தியா சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதில் முக்கிய பங்கு வகித்துள்ளார்.
இந்நிலையில் 2021-ல் வருண் அழுத்தத்தால் மிகவும் தடுமாறியதாக இந்திய முன்னாள் பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் தெரிவித்துள்ளார். அதனால் எந்த மாதிரியான பீல்டிங்கை செட்டிங் செய்ய வேண்டும் என்பது பற்றி கேப்டன் விராட் கோலியிடம் சொல்வதற்கே வருண் பயந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "கண்டிப்பாக அந்த சமயத்தில் அவர் பெரிய தடுமாற்றத்தை சந்தித்தார். எந்த மாதிரியான பீல்டிங் தனக்கு வேண்டும் என்று விராட் கோலியிடம் சொல்வதற்கு கூட அவர் பயந்தார். அதனால் தமக்கு என்ன பீல்டிங் கிடைத்ததோ அதை வைத்து அவர் பந்து வீச வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். ஆனால் தற்போது அவரைப் பாருங்கள். அவர் முற்றிலும் வித்தியாசமான கிரிக்கெட்டராக மாறியுள்ளார்
கிரிக்கெட் என்பது 90 சதவீதம் மனநிலையைப் பொறுத்தது என்று நாம் சொல்வோம். தற்போது வருண் அதற்கு உண்மையான எடுத்துக்காட்டாக நிற்கிறார். தற்போது பந்தை கொடுத்தால் என்ன செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரிகிறது. தனது சொந்த வழியில் பீல்ட் செட்டிங் செய்யும் அவர் தன் மீது அதிக தன்னம்பிக்கையையும் கொண்டுள்ளார்" என்று கூறினார்.