'வருணன்' திரைப்பட விமர்சனம்

3 hours ago 2

சென்னை,

யாக்கை பிலிம்ஸ் தயாரிப்பில் ஜெயவேல்முருகன் இயக்கியுள்ள படம் 'வருணன்'. இதில் துஷ்யந்த் ஜெயபிரகாஷ் மற்றும் கேப்ரில்லா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ராதா ரவி, சரண்ராஜ், ஷங்கர்நாக் விஜயன், ஹரிபிரியா, ஜீவா ரவி, மகேஷ்வரி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படம் தண்ணீரை வியாபாரமாக்கும் மனிதர்களின் வாழ்வியல் பின்னணியில் இயக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயவேல்முருகன் இயக்கிய 'வருணன்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

சென்னை ராயபுரம் பகுதியில் ராதாரவியும், சரண்ராஜும் தனித்தனியாக தண்ணீர் கேன் வியாபாரம் செய்கின்றனர். ராதாரவியிடம், துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், பிரியதர்ஷன் ஆகிய இருவரும் வேலை பார்க்கின்றனர். சரண்ராஜின் மனைவியும், மைத்துனரும் ராதாரவியின் வியாபாரத்தை நசுக்க சதி செய்கின்றனர். இதனால் கோஷ்டி சண்டைகள் உருவாகி, கொலைகள் செய்யும் அளவுக்கு நீள்கிறது. இந்த பகையால் இரு கோஷ்டிக்கும் ஏற்படும் பாதிப்புகள், இழப்புகள் என்ன? என்பது மீதி கதை.

தண்ணீர் கேன் வியாபாரியாக வரும் ராதாரவி அமைதியான அனுபவ நடிப்பால் கதாபாத்திரத்துக்கு பெருமை சேர்த்துள்ளார். தொழிலாளர்களிடம் பரிவு, சக வியாபாரியிடம் நட்பு என்று கேரக்டரை மெருகேற்றி இருப்பது சிறப்பு. துடிப்பான இளைஞராக வரும் துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ் காதல், கோபம், நட்பு, ஆவேசம் என அத்தனை உணர்வுகளையும் முகத்தில் அபாரமாக வெளிப்படுத்தி பளிச்சிடுகிறார். சண்டை காட்சிகளில் வேகம். 

சரண்ராஜ் திக்குவாய் கதாபாத்திரத்தில் அழுத்தமும் ஆவேசமுமான நடிப்பை வழங்கி இருக்கிறார். நாயகிகளாக வரும் கேப்ரில்லா, ஹரிப்பிரியா ஆகியோர் கதாபாத்திரங்களை ரசித்து செய்து கவனம் பெறுகின்றனர். ஜீவா ரவி, மகேஸ்வரி, ஷங்கர் நாக், பிரியதர்ஷன், அர்ஜுன்னா கீர்த்தி வாசன், ஹைட் கார்த்தி, கவுசிக், டும்கான் மாரி, கிரண் மயி ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நேர்த்தி. ஆரம்ப காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. பிற்பகுதியில் வேகம்.

எஸ்.ஶ்ரீராம சந்தோஷ் கேமரா குடிசைப் பகுதிகள், குறுகலான தெருக்கள், கடை வீதிகளில் வளைந்து நெளிந்து படம்பிடித்து காட்சிகளை யதார்த்தமாக கண்முன் நிறுத்தி உள்ளது. போபோ சசியின் பின்னணி இசை கதையோடு ஒன்ற செய்யும் பணியை சிறப்பாக செய்துள்ளது. தண்ணீரை வியாபாரமாக்குவது மனிதர்களை யுத்தத்துக்கு தள்ளி விடும் என்ற கருவை வைத்து சாதாரண மனிதர்களின் வாழ்வியல் பின்னணியில் காட்சிகளை விறுவிறுப்பாகவும், ரசிக்கும்படியும் காட்சிப்படுத்தி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஜெயவேல் முருகன்.

Read Entire Article