வருசநாடு அருகே கிடப்பில் இருக்கும் சாலை பணிகள்

1 week ago 1

*மீண்டும் துவங்க கோரிக்கை

வருசநாடு : தேனி மாவட்டம், வருசநாட்டில் இருந்து வாலிப்பாறை வரை மலைச்சாலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அப்போது குறிப்பிட்ட சில பகுதிகள் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வருவதாக கூறி தார் சாலை அமைக்கும் பணிகளுக்கு வருசநாடு வனத்துறையினர் தடை விதித்தனர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வனத்துறையினருடன் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தார்சாலை அமைக்க அனுமதி கிடைக்கவில்லை. எனவே வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தவிர்த்து மற்ற இடங்களில் தார்ச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிந்தது.

இந்தப் பணிகள் முடிந்து 7 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில் தற்போது வரையும் மீதமுள்ள பகுதிகளில் தார் சாலை அமைக்க வனத்துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதனால் அந்த பகுதியில் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது.

எனவே வாகனங்கள் சென்று வருவதற்கு மிகவும் சிரமமடைகின்றன.இதற்கிடையே கடந்த வாரம் பெய்த தொடர் கனமழையின் காரணமாக தார்சாலை அமைக்கப்படாத பகுதிகள் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.

குறிப்பாக வருசநாடு முதல் முருக்கோடை வரையிலான சுமார் 1 கி.மீ தொலைவிலான பகுதி முற்றிலுமாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால் பள்ளங்கள் தெரியாமல் டூவீலர்களில் செல்பவர்கள் தடுமாறி விழுகின்றனர். மேலும் வாகன ஓட்டிகள் சிரமமடைகின்றனர்.

இதனால் விபத்து அபாயம் உள்ளது.எனவே சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி மீதமுள்ள பகுதிகளில் தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post வருசநாடு அருகே கிடப்பில் இருக்கும் சாலை பணிகள் appeared first on Dinakaran.

Read Entire Article