26.03.2021 அன்று மயிலாப்பூர் PNK கார்டன் 6வது தெருவில் வசித்து வந்த கபாலி, வ/38 என்பவர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக E-1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, இறந்துபோன கபாலியின் மனைவி வனிதா, பெ/வ.35 மற்றும் வனிதாவின் சகோதரர் சாந்தகுமார், வ/42 ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போதைய E-1 மயிலாப்பூர் காவல் நிலைய ஆய்வாளர் S.மீனாட்சி சுந்தரம் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, 19வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடிவடைந்து 08.04.2025 அன்று வழங்கிய தீர்ப்பில், எதிரிகள் இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், 2 குற்றவாளிகளுக்கும் ஆயுள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2,000/- அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
இதே போல, 30.04.2022 அன்று இரவு, திருவான்மியூர் குப்பம், வேம்புலியம்மன் கோயில் தெருவில் 16ம் நாள் காரிய நிகழ்ச்சிக்கு வந்திருந்த அதே தெருவைச் சேர்ந்த அருண், வ/22, த/பெ.பக்கிரிசாமி மற்றும் இவரது நண்பர் பாபு (எ) சதீஷ்குமார் ஆகிய இருவரை, தினேஷ் என்பவர் கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார். இது தொடர்பாக J-6 திருவான்மியூர் காவல் நிலையத்தில் இரட்டை கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி தினேஷ், வ/24, த/பெ.ரமேஷ், வேம்புலியம்மன் கோயில் தெரு, திருவான்மியூர் குப்பம், சென்னை என்பவரை 01.05.2022 அன்று கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர்.
அப்போதைய J-6 திருவான்மியூர் காவல் நிலைய ஆய்வாளர் E.ராமசுந்தரம் தலைமையிலான காவல் குழுவினரால் முறையாக விசாரிக்கப்பட்டு, இறுதி அறிக்கை தயார் செய்து, சென்னை சிங்காரவேலர் மாளிகை வளாகத்தில் உள்ள 17வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்து வழக்கு விசாரணை முடிவடைந்து 15.04.2025 அன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
இவ்வழக்கில் எதிரி தினேஷ் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளி தினேஷுக்கு 2 கொலை குற்றங்களுக்கும் 2 ஆயுள் சிறை தண்டனை எனவும், இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும், மேலும் ரூ.10,000/- அபராதம் விதித்து, அபராதம் செலுத்த தவறினால் மேலும் 1 வருடம் கடுங்காவல் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி கொலை வழக்குகளில் சிறப்பாக புலனாய்வு செய்து, இறுதி அறிக்கையுடன் நீதிமன்றத்தில் ஆவணங்கள் மற்றும் சாட்சியங்களை ஆஜர் செய்து, குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஆயுள் தண்டனை மற்றும் அபராதம் கிடைக்க சீரிய பணியாற்றிய தற்போதைய அடையார் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் S.மீனாட்சி சுந்தரம் மற்றும் J-4 கோட்டூர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் E.ராமசுந்தரம் ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ஆ.அருண், இ.கா.ப., இன்று (17.04.2025) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
The post கொலை வழக்குகளில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை கிடைக்க சீரிய பணியாற்றிய காவல் ஆய்வாளர்களை நேரில் அழைத்து பாராட்டினார் சென்னை காவல் ஆணையாளர் appeared first on Dinakaran.