
திருத்துறைப்பூண்டி,
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த சசிகலா, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
வாங்கிய கடனுக்கு வட்டி கட்டவே தி.மு.க. அரசால் முடியவில்லை. இப்படி இருக்கும்போது மக்களுக்கு நலத்திட்டங்களை எப்படி தி.மு.க. அரசால் வழங்க முடியும்?. தற்போதைய அரசு பஸ்களில் மக்கள் ஏறுவதற்கே பயப்படுகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் எனது பங்களிப்பு கண்டிப்பாக இருக்கும். மாற்றம் கண்டிப்பாக இருக்கும். ஆளும் தி.மு.க. அரசு ரூ.8 லட்சம் கோடி கடன் வாங்கி உள்ளது.
பேரூராட்சிகளை, நகராட்சிகளாக்கும் பணிகளில் இந்த அரசு மிக தீவிரமாக உள்ளது. பேரூராட்சியில் ஒரு வீட்டுக்கு வரி செலுத்தும் போது குறைவாக வரி செலுத்தியவர்கள் நகராட்சியாக மாற்றிய பிறகு 3 அல்லது 4 மடங்கு அதிகமாக வரிசெலுத்தும் நிலை ஏற்பட்டு உள்ளது. மின் கட்டணத்துக்கு கூடுதல் பணம் செலுத்த வேண்டி உள்ளது. இந்த அரசிடம் இருந்து தமிழக மக்களுக்கு விரைவில் விடிவு காலம் பிறக்கும்.
இவ்வாறு சசிகலா கூறினார். அப்போது சசிகலா சகோதரர் திவாகரன் உள்பட பலர் உடன் இருந்தனர். பின்னர் சசிகலா திருத்துறைப்பூண்டி-நாகை சாலையில் உள்ள சாய்பாபா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.