கடந்து விட்டது 2024ம் ஆண்டு. விடிந்து விட்டது 2025ம் ஆண்டு. எத்தனையோ மாற்றங்களை உருவாக்கி விட்டு கடந்து விட்ட 2024க்கு நன்றி. அதே போல் புத்துணர்ச்சியாக புகுந்து இருக்கும் 2025க்கு வருக வருகவென வரவேற்போம். மாற்றம் ஒன்று தான் என்றும் மாறாதது. அந்த மாற்றம் இருக்கும் வரையிலும் உலகம் இயங்கிக்கொண்டே இருக்கும். இன்று பிறந்திருக்கும் 2025ம் ஆண்டும் உலகம் முழுவதும் நல்ல மாற்றத்தை விதைக்க வேண்டும். அதையே அனைவரும் விரும்புவோம்.
2024ல் நல்ல பல விஷயங்கள் நடந்தாலும், இஸ்ரேல்-காசா போர், ரஷ்யா-உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இன்னும் இந்தியா-பாகிஸ்தான் எல்லை, பாகிஸ்தான்-ஆப்கன் எல்லை, சீனா- தைவான், வடகொரியா-தென் கொரியா…இந்த வரிசையில் எல்லை பிரச்னை உள்ள நாடுகள் பட்டியல் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாக இணைந்து கொண்டே இருக்கின்றன. போர் வன்முறை உச்ச கட்டத்தில் இருக்கும் காலகட்டத்தில் பிறந்திருக்கிறது 2025ம் ஆண்டு.
இந்த ஆண்டில் மனிதம் மலர்ந்து, போர் வெறி குறைந்து, உலக நாட்டு தலைவர்கள் உயிர்கள் மீதான அக்கறையில் சமாதான பேச்சுவார்த்தை மூலம் சமரசம் மேற்கொள்ள வேண்டும். அப்பாவி பொதுமக்கள் உயிர்பலி இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில் இயற்கை சீற்றங்கள் அதிகரித்து இருக்கின்றன. குறிப்பாக புவி வெப்பமயமாதல் காரணமாக ஆங்காங்கே பெருமழை கொட்டித்தீர்க்கிறது. ஒரு மணி நேரத்தில் 50 செமீ மழை எல்லாம் சாதாரணம்.
இந்தியா உள்பட உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருக்கிறது. விழுப்புரம், கடலூர் பகுதியிலும், நெல்லை, தூத்துக்குடி பகுதியிலும் பெய்த மழை வெள்ளம் ஒரு எளிய உதாரணம். ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளில் இதன் பாதிப்பு அதிகம். பாலைவனங்களை கூட பெரு வெள்ளம் விட்டு வைக்கவில்லை. இங்கிலாந்து நாட்டில் இன்றைய புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெருமழை எச்சரிக்கையால் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இயற்கையை மனிதனால் கட்டுப்படுத்த முடியாது.
ஆனால் இயற்கையை சேதப்படுத்தாமல் இருக்கலாம். அதற்கான வழியை, பெரு வெள்ள பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து, அதில் இருந்து தப்பிக்க இன்னும் அதிநவீன தொழில்நுட்பத்தை இந்த 2025ம் ஆண்டில் உலக மக்களுக்கு தரக்கூடிய ஆண்டாக அமைய வேண்டும். கொரோனா போன்ற நோய்கள் உலகை ஆட்டிப்படைத்து விட்டு சென்றுவிட்டன. இன்றுவரை இந்தியாவில் 80 கோடி பேருக்கு இலவச உணவு விநியோகம் செய்யக்கூடிய நிலை இருக்கிறது. பல நாடுகளில் வறுமை வாட்டிவதைக்கிறது.
சூடான், சிரியா போன்ற நாடுகள் உள்நாட்டு கலவரங்களில் சிக்கித்தவிக்கின்றன. இன்னும் அரசியல் மோதல் உள்ள நாடுகள் ஏராளம். அங்கெல்லாம் 2025ல் அமைதி நிலவ வேண்டும். வளரும் இளம் உள்ளங்கள் வன்முறை இல்லாமல், அன்பும், அறிவும் மிகுந்த மனங்களாக மாறி, இந்த உலகத்திற்கு புதுவித நவீன நல்ல பயன் உள்ள கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு சாதிக்க வேண்டும். உயிர்க்கொல்லி நோயான புற்று நோய்க்கு மருந்துகண்டுபிடித்து விட்டதாக ரஷ்யா அறிவித்து இருக்கிறது.
அந்த மருந்தை இந்த ஆண்டில் உலகம் முழுவதும் இலவசமாக சப்ளை செய்யப்போவதாகவும் தெரிவித்து இருக்கிறது. அந்த மருந்து நோயை 100 சதவீதம் குணப்படுத்தக்கூடியதாக மாற வேண்டும். இதன் மூலம் உலகம் முழுவதும் உள்ள நோயாளிகள் முகத்தில் புன்சிரிப்பு மலர வேண்டும். இன்னும் ஏராளமான ஆசைகள் ஒவ்வொருவர் மனதிலும். 2024ல் மட்டும் 7 கோடி மக்கள் தொகை அதிகரித்து, இந்த புத்தாண்டு தினத்தில் உலக மக்கள் தொகை 800 கோடியாக உயர்ந்து இருக்கிறது. அத்தனை பேர் மனங்களும் மலர வருக…வருக… புத்தாண்டு 2025.
The post வருக… வருக… appeared first on Dinakaran.