வாஷிங்டன்: பணக்காரர்களுக்கு வரி சலுகை, அரசு செலவினம் குறைப்பு உள்ளிட்ட அதிபர் டிரம்பின் பட்ஜெட் தீர்மான மசோதா மீதான வாக்கெடுப்பு அமெரிக்க நாடாளுமன்றத்தில் விடிய விடிய நடந்தது. இந்த மசோதா ஆளுங்கட்சியின் பெரும்பான்மையின் மூலம் நிறைவேறியது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதைத் தொடர்ந்து, பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துள்ளார். அரசு நிர்வாகத்தின் செலவுகளை குறைக்க யுஎஸ்எய்டு உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு மூடுவிழா நடத்தி உள்ளார். பல அரசு துறைகளில் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்துள்ளார்.
இது தவிர வரி விதிப்புகளிலும் பல மாற்றங்களை செய்துள்ளார். இந்நிலையில், அதிபர் டிரம்பின் பட்ஜெட் தீர்மான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேலவையான செனட் அவையில் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதம் நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு தொடங்கிய வாக்கெடுப்பு பணிகள் விடிய விடிய நடந்தது. இதில், ராணுவ நிதி ஒதுக்கீடு, உள்நாட்டு பாதுகாப்பு, சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்களை நாடு கடத்துதல் உள்ளிட்டவைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
இந்த வாக்கெடுப்பில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் கொண்டு வந்த பல்வேறு திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டன. இறுதியில் பட்ஜெட் தீர்மான மசோதா 51-48 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் நிறைவேற்றப்பட்டது. இதில் டிரம்பின் சில கொள்கைகளுக்கு அவரது சொந்த கட்சியான குடியரசு கட்சியின் மூத்த எம்பிக்களே எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, 2017ல் கொண்டு வந்த பெரு நிறுவனங்களுக்கான வரி 35 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக குறைக்கும் முடிவு விரைவில் காலாவதியாக உள்ளது.
இதை நீட்டிக்க தீர்மானம் கொண்டு வந்துள்ள டிரம்ப் நிர்வாகம் தனிநபர்களுக்கான வரிச் சலுகையை நீட்டிக்கவில்லை. எனவே இது பெரும் பணக்காரர்களுக்கு மட்டுமே உதவும் என்றும், சாமானிய மக்களுக்கு மேலும் சுமை ஏற்படும் என்றும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும், டிரம்பின் பட்ஜெட் கொள்கைகளால் அடுத்த 10 ஆண்டுக்கு அரசுக்கு கூடுதலாக ரூ.435 லட்சம் கோடி இழப்பு ஏற்படும் என்று ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
* அதிபர் டிரம்ப், எலான் மஸ்க்கிற்கு எதிராக போராட்டம்
அமெரிக்க அரசின் ஆட்குறைப்பு, பொருளாதாரம் மற்றும் பிற பிரச்னைகள் தொடர்பாக நிர்வாகத்தின் நடவடிக்கைகளை எதிர்த்து அமெரிக்கா முழுவதும் நேற்று பேரணி நடைபெற்றது. அதிபர் டொனால்ட் டிரம்ப், எலான் மஸ்க் ஆகியோருக்கு எதிராக ‘கைவிடுங்கள்’ என்ற தலைப்பில் மிகப்பெரிய பேரணி நேற்று நடத்தப்பட்டது. சிவில் உரிமைகள் அமைப்பு, தொழிலாளர் சங்கம், முன்னாள் படை வீரர்கள், நியாயமான தேர்தல் ஆர்வலர்கள் உட்பட 150க்கும் மேற்பட்ட குழுக்களை சேர்ந்த சுமார் 1200க்கும் மேற்பட்டோர் கைவிடுங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாஷிங்டன் மற்றும் மாகாண தலைநகரங்களில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
The post வரி சலுகை, அரசு செலவினம் குறைப்பு அதிபர் டிரம்பின் பட்ஜெட் தீர்மானம் நிறைவேறியது: அமெரிக்க நாடாளுமன்றத்தில் விடிய விடிய வாக்கெடுப்பு appeared first on Dinakaran.