வரவேற்கத்தக்க முடிவு

1 month ago 7

தமிழ்நாட்டில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தி பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்தும் திமுக அரசு பாராட்டுகளை பெற்று வருகிறது. இதனை சகித்து கொள்ள முடியாத ஒன்றிய அரசு, தமிழக அரசுக்கு பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்த தொடர்ந்து தீவிரம் காட்டிவருகிறது. குறிப்பாக பிஎம்ஸ்ரீ திட்ட ஒப்பந்தத்தில் தமிழக அரசு கையெழுத்திட வேண்டும் என்று ஒன்றிய அரசு நிர்பந்தம் செய்து வருகிறது. இதை தமிழக அரசு ஏற்கவில்லை. இதனால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் அசாம், பீகார், குஜராத், ஜார்க்கண்ட், கர்நாடகா, கேரளா, மிசோரம், ஒடிசா, பஞ்சாப், சிக்கிம், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களும் இந்த நிதியை பெற முடியவில்லை. இது தவிர 17 மாநிலங்கள் போதிய வசதி இல்லை என்ற காரணத்தாலும், 4 மாநிலங்கள் கழிப்பறை வசதிகள் இன்மையாலும் நிதியை பெறமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டன. இதற்கிடையில் பிஎம்ஸ்ரீ திட்டங்களை ஏற்றால் தான் நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய கல்வித்துறையின் அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளிப்படையாக அறிவித்து விட்டார்.

இதுபோன்று மற்றொரு திட்டமான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நிதியான ரூ.4,034 கோடியை ஒன்றிய அரசு கடந்த 5 மாதங்களாக தமிழ்நாட்டுக்கு தரவில்லை. இந்த திட்டத்தில் தான் பெண்கள், அதிகம் பயனடைகிறார்கள். இதுகுறித்து நாடாளுமன்றத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிகள் கேள்வி எழுப்பி இருஅவைகளையும் ஸ்தம்பிக்க வைத்தனர். மேலும் நாடாளுமன்றம் வெளியேயும் போராட்டங்களையும் நடத்தினர். மேலும் இரண்டு திட்டங்களுக்கு நிதி கேட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின், தொடர்ந்து பிரதமருக்கு கடிதங்களையும் எழுதினார். ஆனால் ஒன்றிய அரசு கிஞ்சித்தும் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

கல்வி நிதியை நிறுத்துவது நியாயமற்றது என்று நாடாளுமன்ற கல்விக்கான நிலைக்குழுவும் கடந்த வாரம் ஒன்றிய அரசுக்கு தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஒன்றிய அரசு செலுத்த வேண்டிய மேற்கண்ட நிதியை ஈடுகட்ட தமிழக அரசு தனது சொந்த நிதி வளத்தில் இருந்து சமக்ர சிக்‌ஷாவுக்கு நிதி ஒதுக்கியுள்ளது. இதற்கிடையே, தடையில்லா கல்வியை உறுதி செய்வதற்காக 2025-2026ல் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.46 ஆயிரத்து 767 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

இதற்கிடையே, தமிழக அரசு கடந்த 2022ம் ஆண்டு முதல் சட்டப் பேரவையில் கொண்டு வந்த சட்ட மசோதாக்களுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுவிட்ட நிலையில் தமிழக அரசின் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தான் உச்சநீதிமன்றம் அந்த வழக்கில் முக்கிய தீர்ப்பை வழங்கி 10 மசோதாக்களுக்கும் தானே முன்வந்து ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தமிழக அரசு அவற்றை சட்டமாக்கி அரசிதழில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் ஒன்றிய அரசிடம் இருந்து பள்ளிக் கல்வித்துறைக்கான நிதியைப் பெற உச்சநீதிமன்றத்தை நாடலாம் என்ற முடிவுக்கு தமிழக அரசு வந்துள்ளது. சட்ட நிபுணர்களின் கருத்துரைகளும் கேட்டு ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரவுள்ளது. பாரபட்சமாக நடந்து கொள்ளும் ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்ற கதவுகளை தட்டி தான் நியாயம் கேட்க முடியும். இதில் வெற்றி பெற்றால் தமிழ்நாடு மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பயன்பெறும். மக்கள் நலனுக்காக உச்சநீதிமன்றத்தை நாட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கதாகும்.

The post வரவேற்கத்தக்க முடிவு appeared first on Dinakaran.

Read Entire Article