செய்துங்கநல்லூர்: நெல்லை அருகே வல்லநாட்டில் வாந்தி, பேதியால் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு கிராமத்தில் கடந்த வாரம் கோயில் திருவிழா நடந்து முடிந்தது. நேற்று முன்தினம் இரவு அனைவருக்கும் அசைவ உணவுகள் பரிமாறப்பட்டுள்ளது. அந்த உணவை சாப்பிட்ட பலருக்கு திடீரென வாந்தி, பேதி, மயக்கம் ஏற்பட்டது. உடனே அவர்கள், நெல்லையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து வல்லநாடு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தபோது, ‘திருவிழாவின் போது சர்பத், நீர், மோர் மற்றும் உணவை சாப்பிட்டதால் உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. அதே நேரத்தில், சுகாதாரமற்ற குடிநீர் உபயோகிக்கப்பட்டதே முக்கிய காரணம் என பொதுமக்களிடையே குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வல்லநாடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தாமிரபரணி தண்ணீரால் தான் சுகாதார கேடு ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
இதையடுத்து இன்று காலை வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார துறை அதிகாரிகள், தம்பிராட்டி அம்மன் கோயில் அருகே உள்ள வீடுகளில் பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரை பரிசோதனை செய்து வருகின்றனர். மேலும் பஞ்சாயத்து நிர்வாகம் வழங்கப்படும் குடிநீரில் புழுக்கள் கலந்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுவதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை ஆய்வு செய்ய கலெக்டர் அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
The post கோயில் கொடை விழாவில் உணவு சாப்பிட்டது காரணமா? : வல்லநாட்டில் 30 பேருக்கு வாந்தி : மாவட்ட அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.