‘‘நெற்களஞ்சியத்துக்கு வந்தபோது பெரிய அளவில் வரவேற்பு இல்லாததால் அப்செட்டில் சென்றுவிட்டாராமே குக்கர் கட்சியின் தலைமையானவர்..’’ என்றபடியே வந்தார் பீட்டர் மாமா. ‘‘நெற்களஞ்சியத்திற்கு சில தினங்களுக்கு முன்பு கட்சி நிர்வாகியின் மண்டப திறப்பு விழாவிற்காக குக்கர் கட்சியின் தலைமையானவர் சென்றிருக்கிறார். அப்போது, அவரை வரவேற்க குறைந்த அளவே நிர்வாகிகள் வந்திருந்தார்களாம்.. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குக்கர் கட்சி தலைமையானவர் கடும் அப்செட் ஆயிட்டாராம்.. அப்புறம் கடமைக்கு நிகழ்ச்சியை முடித்து விட்டு அவசர அவசரமாக புறப்பட்டு சென்றுவிட்டாராம்..
தான் வருவது தெரிந்தும் வரவேற்க பெரிய அளவில் கூட்டம் வரவில்லையேன்னு மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கேட்கவும் இல்லையாம்.. இதற்கு முக்கிய காரணம், நிர்வாகிகளை கடிந்து கொண்டால் இருக்கிற நபர்களும் கட்சியில் இருந்து வெளியேறி விடுவாங்க.. நெற்களஞ்சிய மாவட்டத்தில் நிர்வாகிகளே இல்லாமல் குக்கர் கட்சி இயங்குகிறது என எதிரணியினர் கமாண்ட் அடிப்பாங்க.. இதனால் இருக்கிற நிர்வாகிகளை தக்க வைத்துக்கொள்வதுதான் நல்லது என குக்கர் தலைமையானவர் நினைப்பதா அவரது நெருங்கிய நண்பர்கள் வட்டாரத்தில் பேசிக்கிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘பில் போட்டு ஒருபக்கம், பட்டியல் போட்டு ஒருபக்கம் என இல்லாம மிரட்டி பணம் வசூலிப்பதிலும் கில்லியான தாமரைக்கட்சி மாவட்ட தலைவர் மீது தொழிலதிபர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் தாமரை கட்சியினரின் தொடர் மிரட்டலால் தொழிலதிபர்கள் மிகுந்த கலக்கத்தில் இருக்காங்களாம்.. மாவட்டத்தில் மலராத கட்சியின் நிர்வாகம் கிழக்கு, மேற்கு என இரண்டாக செயல்படுகிறது. கிழக்கு மாவட்ட தலைவராக மில்க் பெயரைக் கொண்டவர் உள்ளார். அவர் எப்போதும் தொழிலதிபர்களிடம், ஏதாவது நிகழ்ச்சி நடப்பதாக கூறி பில் போடுவதில் கில்லியாம்..
மாநில தலைவர் யாத்திரை செல்கிறார் என்பது உள்பட பல காரணங்களை பட்டியல் போட்டு வசூலிப்பதாக அக்கட்சியினரே புலம்பி வர்றாங்க.. அந்த வசூலிலும் ஒருபடி மேலே போய் தொழில் நிலைமைக்கு ஏற்ப ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை கொடுக்க வேண்டுமென தொகை பிக்ஸ் பண்ணி வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாராம்.. கேட்கும் பணத்தை கொடுக்காவிட்டால், உங்கள் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபடுவதாக கூறி வழக்கு தொடுக்கப்படும் எனவும் மிரட்டி வருகிறாராம்..
இவரது நடவடிக்கை தொழிலதிபர்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்காம்.. இதுதொடர்பாக மாநில தலைமைக்கு அனுப்பிய புகார்கள் மீதும் நடவடிக்கையில்லாததால், தொழிலதிபர்கள் அதிருப்தியில் இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கடைக்கோடி மாவட்டத்தில் சுந்தரமானவர் இல்லாத நிகழ்ச்சியில் பங்கேற்கும் அதிருப்தி கோஷ்டியினர் கலக்குறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கடைக்கோடி மாவட்டத்தில் இலைக்கட்சியில அதிருப்தி கோஷ்டி இன்னும் அப்செட் மூடில் தான் இருக்காங்களாம்..
கள ஆய்வுக்குழு கூட்டத்துக்கு பிறகும், எந்தவித பிரயோஜனமும் இல்லையாம்.. இந்த கூட்டத்துக்கு தலைமையிடத்தால் அனுப்பி வைக்கப்பட்டு இருந்த மாஜியானவர், சமாதானம் பேசி கட்சியின் தலைமையான சேலத்துக்காரரின் கவனத்துக்கு உங்கள் பிரச்னையை கொண்டு போய் முடிப்போம் என கூறி உள்ளாராம்.. இந்த மாஜியானவர், சேலத்துக்காரரின் வலதுகாரர் என்பதால், இவரு சொன்னதை செய்வாரு என்று அதிருப்தி கோஷ்டி எதிர்பார்த்து இருக்காங்களாம்..
ஆனாலும் கூட்டம் முடிஞ்சி இரு வாரங்கள் ஆகியும் நடவடிக்கைக்கான எந்தவித சமிக்ஞைகளும் இல்லையாம்.. மீண்டும் மா.செ. ஆன சுந்தரமானவரு, கட்சியின் தலைமையான சேலத்துக்காரருடன் சமீபத்தில் தான் சென்னையில் சந்தித்து இருக்காரு.. இருவரும் கட்சியான தலைவியின் நினைவஞ்சலி நிகழ்ச்சிக்கு செல்லும் போது கைகோர்த்து சிரித்தப்படி சென்று இருக்காங்க.. இந்த படத்தை சுந்தரமானவரின் ஆதரவாளர்கள் வைரலாக்கி அதிருப்தி கோஷ்டியை கடுப்பாக்கி இருக்கிறார்களாம்.. சுந்தரமானவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு அதிருப்தி கோஷ்டியினர் ஏற்கனவே வருவது இல்லையாம்..
சுந்தரமானவர் ஊரில் இல்லாத சமயத்தில் நிகழ்ச்சியில் கலக்குகிறாங்களாம்.. கட்சி தலைவியின் நினைவு தின நிகழ்ச்சி, அம்பேத்கர் சிலை மாலை நிகழ்ச்சியில் அதிருப்தி கோஷ்டியை சேர்ந்தவர்கள் அதிகம் பேர் பங்கேற்று இருக்காங்க.. ஆனால் சுந்தரமானவர் வராததால் அவரது ஆதரவாளர்கள் பலர், ஆப்சென்ட் ஆகி இருக்காங்களாம்.. இவற்றை, இலைக்கட்சியின் நெட்வொர்க் டீம், ரகசியமாக கண்காணிச்சி படம் பிடிச்சு தலைமைக்கு அனுப்புறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் சர்ச்சை இருப்பது, காக்கி வட்டாரத்தையே கலங்கடிப்பது தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘சேரி பெயர் கொண்ட பிரதேசத்தில் அரசு இயந்திரங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுவதாக மக்களிடம் முணுமுணுப்பு அதிகரித்துள்ளதாம்..
ஆளுங்கட்சி ஆசியுடன் சில அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுவதாக பொதுவெளியில் போராட்டங்களும் அரங்கேறின.. இது ஒருபுறமிருக்க குற்ற புலனாய்வு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் பிரிவில் உள்ள ஒரு பவர் அதிகாரி, கூடுதலாக சில பொறுப்புகளையும் கவனித்துவரும் நிலையில் சொத்து உள்ளிட்ட உயில் விவகாரங்கள், அரசு நிலங்களை மீட்டெடுத்தல் தொடர்பான வழக்குகளை கையாளும்போது ‘ப’ விட்டமின் கேட்பதில் கறாராக உள்ளாராம்.
நியாயம் கேட்க வந்த இடத்தில அநியாயம் நடந்த ஆதங்கத்தில் சொத்து விவகாரத்தால் பாதிக்கப்பட்ட தரப்பு, ரூட்டை நேராக சிபிஐக்கு திருப்பி விட்டதாம்.. நடந்த சம்பவங்களை புட்டுபுட்டு ஆதாரங்களுடன் முன்வைக்கவே, சிபிஐ கண்காணிப்பு வளையத்தில் அந்த சர்ச்சை அதிகாரி இருக்கிறாராம்.. இதுபற்றிய தகவல்தான் இப்போ வலைதளங்களிலும் உலாவி காக்கி வட்டாரத்தையே கலங்கடித்து வருகிறதாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post வரவேற்க ஆளில்லாததால் வாடிப்போன குக்கர் தலைவரை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.