புதுடெல்லி: மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) உதவி கமாண்டன்ட் பூனம் குப்தா, குடியரசு தலைவர் மாளிகையில் பிஎஸ்ஓ-வாக பணியில் இருந்து வருகிறார். சிஆர்பிஎஃப் உதவி கமாண்டன்டாக ஜம்மு – காஷ்மீரில் அவ்னீஷ் குமார் மனுவா என்பவர் பணியாற்றி வருகிறார். மேற்கண்ட இருவருக்கும் வரும் 12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதை அறிந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, ‘மேற்கண்ட இருவரின் திருமணம் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடத்தப்பட வேண்டும்’ என்று பரிந்துரைத்தார்.
அதனை இருதரப்பு குடும்பத்தினரும் ஏற்றுக் கொண்டனர். அதனால் குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள அன்னை தெரசா கிரீடம் வளாகத்தில் பூனம் குப்தா – அவ்னீஷ் குமார் மனுவா ஜோடிக்கு திருமணம் நடைபெறவுள்ளது. திருமண விழா குடியரசு தலைவர் மாளிகையில் நடப்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சிறப்பு விருந்தினர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். மணமகளான பூனம் குப்தா மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரியை சேர்ந்தவர் ஆவார். அவர் சமீபத்தில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் சிஆர்பிஎப்-பின் பெண்கள் அணிக்கு தலைமை தாங்கினார்.
இவரது தலைமையிலான குழுவிற்கு பரிசும் கவுரவமும் கிடைத்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக, நாட்டின் முதல் குடிமகனின் (குடியரசு தலைவர்) அதிகாரப்பூர்வ இல்லத்தில் திருமண நிகழ்வு ஒன்று நடப்பதால் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இரண்டு சிஆர்பிஎஃப் அதிகாரிகளின் திருமணத்திற்கான இடமாக குடியரசுத் தலைவர் மாளிகை மாறியுள்ளதால், இதுகுறித்த விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.
The post வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி மாளிகையில் சிஆர்பிஎப் ஜோடிக்கு திருமணம்: சிறப்பு விருந்தினருக்கு மட்டும் அனுமதி appeared first on Dinakaran.