இயற்கை எழில் கொஞ்சும் கேரளாவில் நதிகளும், மலைகளும் எப்போதுமே பிரமிக்க வைக்கும். இயற்கை வளங்களை பேணுவதில் மலையாளிகளுக்கு அலாதி பிரியம் காரணமாக, அங்கு குப்பைகளை கூட அதிகம் தேக்கி வைப்பதில்லை. அதிலும் மருத்துவ கழிவுகள் உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் நச்சு குப்பைகளை கேரளாவிற்கு வெளியே அனுப்பி விடுவது வழக்கம். கேரளாவிற்கு அருகில் உள்ள தமிழகம், பல சமயங்களில் கேரள கழிவுகளின் தேக்கமாக உள்ளது. கேரளாவின் மருத்துவ கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், உணவு கழிவுகள் பலமுறை கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டப்பட்டிருக்கின்றன.
கேரள மக்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தமிழகத்தில் இருந்தே செல்கின்றன. அவ்வாறு கொண்டு செல்லும் கனரக வாகனங்களையே, குப்பை லாரிகளாக மாற்றி, கேரள எல்கையை தாண்டி குப்பைகளை கொட்ட கருவியாக பயன்படுத்தி கொள்கின்றனர். சமீபகாலமாக நெல்லை மாவட்டம் சுத்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளிலும் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவ கழிவுகள் பல்வேறு பகுதிகளில் கொட்டப்பட்டன. இதனால் வரும் ஆபத்துகளை உணர தொடங்கிய பொதுமக்கள், தற்போது கேரளாவின் சுயரூபத்தை வெளிக்கொணரும் வகையில் போராட தொடங்கினர்.
இதையடுத்து நெல்லை மாவட்ட நிர்வாகம் நேரடியாக களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. கேரள கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து தென்மண்டல பசுமை தீர்ப்பாயமும் தாமாகவே முன்வந்து விசாரணையை தொடங்கியது. கொட்டிய கழிவுகளை கேரளத்திற்கே எடுத்துச் செல்ல வேண்டும் என பசுமை தீர்ப்பாயம் வலியுறுத்தியது. பிரச்னை கைமீறி போவதை கருத்தில் கொண்டே கேரள அதிகாரிகள் நேரடியாக நெல்லை மாவட்டத்திற்கே வந்து கொட்டப்பட்ட கழிவுகளை ஆய்வு நடத்தினர்.
தமிழகத்தில் கழிவுகளை கொட்டிய விவகாரம் தொடர்பாக கண்ணூரைச் சேர்ந்த தனியார் மருத்துவ கழிவு மேலாண்மை நிறுவன மேற்பார்வையாளரை கேரள போலீசார் கைது செய்தனர். தமிழக போலீசாரும், அங்கிருந்து கழிவுகளை கொண்டு வந்த குற்றத்திற்காக வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர். மருத்துவ கழிவுகளை நெல்லைக்கு கொண்டு வந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசும், காவல்துறையும் மேற்கொண்ட நடவடிக்கைகள் பொதுமக்களின் பாராட்டை பெற்றன.
அதுமட்டுமின்றி, கேரள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கே வந்து 16 லாரிகளில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகளை அள்ளி கொண்டு கேரளா சென்றனர். வரலாற்றிலேயே முதன்முறையாக கொட்டப்பட்ட கழிவுகள், மீண்டும் அம்மாநிலத்திற்கே திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் சமூக ஆர்வலர்களின் நன்மதிப்பையும் பெற்றது. கேரளாவில் மருத்துவ கழிவுகளை அகற்றும் 3 நிறுவனங்களுக்கு, அம்மாநில அரசு தற்போது நோட்டீஸ் வழங்கியுள்ளது. இச்சம்பவத்தில் விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
‘சொர்க்கம் என்பது நமக்கு, சுத்தமுள்ள வீடுதான்’ என்பது நம்மவருக்கும் பொருந்தும். அடுத்தவர்களுக்கும் பொருந்தும். நமது வீடு, நமது ஊர், நமது மாநிலம் சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பதில் தவறில்லை. அதற்காக அடுத்தவர் இடங்களை அசுத்தப்படுத்த நினைக்கும்போதுதான் பிரச்னைகள் எழுகிறது. தமிழக மக்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு, கேரளாவிற்கு வருங்காலத்தில் எச்சரிக்கை மணியாக இருக்ககூடும்.
The post வரலாற்றில் முதன்முறை appeared first on Dinakaran.