வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி 23ம் தேதி வேட்பு மனு தாக்கல்: ராகுல்காந்தி பிரசாரம்

4 weeks ago 6


திருவனந்தபுரம்: வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி வரும் 23ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார். அன்று முதல் 10 நாட்கள் தொகுதியில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளார். அவருடன் ராகுல் காந்தியும் இணைந்து பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 13ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தியும், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர். பாஜ கூட்டணி வேட்பாளராக குஷ்பு நிறுத்தப்படுவார் என பரவலாக தகவல் பரவினாலும் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இதற்கிடையே வேட்பு மனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது. நேற்று தேர்தல் மன்னன் கே. பத்மராஜன் 244வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார். நேற்று இவர் மட்டும்தான் வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பிரியங்கா காந்தி அடுத்த வாரம் முதல் வயநாட்டில் பிரசாரத்தை தொடங்க உள்ளார். இதற்காக 22ம் தேதி அவர் வயநாட்டுக்கு வருகிறார். மறுநாள் (23ம் தேதி)வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று முதல் 10 நாட்கள் பிரியங்கா காந்தி வயநாடு தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். அவருடன், ராகுல் காந்தியும் வயநாட்டுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தொகுதியில் ஏற்கனவே காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரசாரம் தொடங்கப்பட்டுவிட்டது. பிரியங்கா காந்தி வந்தவுடன் காங்கிரசின் பிரசாரம் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கிய இடங்களில் ரோடு ஷோ மற்றும் பிரசார பொதுக்கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி இந்த தொகுதியில் கடந்த 2019ம் ஆண்டு நடந்த தேர்தலில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், இந்த ஆண்டு நடந்த தேர்தலில் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி 23ம் தேதி வேட்பு மனு தாக்கல்: ராகுல்காந்தி பிரசாரம் appeared first on Dinakaran.

Read Entire Article