வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டி

3 months ago 21

புதுடெல்லி,

ஜார்கண்ட் மற்றும் மராட்டிய மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதியை, தேர்தல் கமிஷன் இன்று அறிவித்தது. அதன்படி ஜார்கண்ட் சட்டசபைக்கு நவம்பர் 13 மற்றும் 20-ந் தேதிகள் என 2 கட்டமாகவும், மராட்டிய சட்டசபைக்கு நவம்பர் 20-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதனுடன் சேர்த்து பல்வேறு மாநில சட்டசபைகளில் காலியாக உள்ள 47 தொகுதிகளுக்கும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால் காலியான கேரள மாநிலம் வயநாடு மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 13-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. உத்தரகாண்டில் உள்ள கேதார்நாத் சட்டமன்ற தொகுதிக்கும், மராட்டிய மாநிலத்தில் உள்ள நான்டெட் மக்களவைத் தொகுதிக்கும் நவம்பர் 20-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இரண்டு மாநில சட்டசபை தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் நடைபெறும் தொகுதிகளில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ந் தேதி எண்ணப்படுகின்றன என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வயநாடு மக்களவைத்தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. அதேபோல கேரள சட்டமன்ற இடைத்தேர்தலில் ரம்யா ஹரிதாஸ் மற்றும் ராகுல் மம்கூடத்தில் செல்லக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுவார்கள்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article