
பா.ம.க.வில் கட்சியின் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே அதிகார யுத்தம் நடந்து வருகிறது. கட்சியின் நிறுவனரும் நானே, தலைவரும் நானே என்று ஏற்கனவே ராமதாஸ் அறிவித்துவிட்டார்.
இதனிடையே, சமீபத்தில் மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழு நிலவு மாநாட்டில் ராமதாஸ், அன்புமணி இடையேயான மோதல் போக்கு பட்டவர்த்தனமாக தெரிந்தது.
இந்நிலையில், பா.ம.க.வின் ஆணிவேரான வன்னியர் சங்கத்தின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், வன்னியர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் திண்டிவனம் தைலாபுரத்தில் இன்று நடக்கிறது.
காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்கும்படி நிர்வாகிகளுக்கு வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளார். பா.ம.க.வை போன்று வன்னியர் சங்கத்திலும் 91 மாவட்ட செயலாளர்கள், 91 தலைவர்கள் உள்ளனர். ஒரு மாவட்டத்துக்கு ஒரு தலைவர், ஒரு செயலாளர், 2 துணை செயலாளர்கள், 2 துணை தலைவர்கள், ஒரு பொருளாளர் என மாவட்டத்துக்கு 7 வன்னியர் சங்க நிர்வாகிகள் உள்ளனர்.
கட்சி நிர்வாகிகளை அழைத்து பேசியது போல் வன்னியர் சங்க நிர்வாகிகளையும் அழைத்து அன்புமணி இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டாம் என்று கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் ராமதாஸ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கலந்து கொள்வார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனால் வன்னியர் சங்க மாநில தலைவர் அருள்மொழி மற்றும் கவுரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்துக்கு கலந்து கொள்ள உள்ளதால், அனைத்து நிர்வாகிகளும் ராமதாசை சந்தித்து ஆலோசனை மேற்கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.
இதனால் வன்னியர் சங்க நிர்வாகிகள் யார் பக்கம்? அன்புமணியா? ராமதாஸா? யார் கை ஓங்கும்? என்ற பரபரப்பு அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது. அதிகார மோதலால் பழம்பெரும் தலைவர்களில் ஒருவரான ராமதாஸ் தனது மகனிடத்திலேயே பலத்தை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. வன்னியர் சங்க நிர்வாகிகள் கூட்டத்தையும் அன்புமணி புறக்கணிப்பாரா அல்லது வன்னியர் சங்க நிர்வாகிகளை நேரில் சந்திப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. பா.ம.க.வை இத்தனை ஆண்டுகள் கட்டிக்காத்து மகனிடம் ஒப்படைத்த ராமதாஸ் ஓரங்கட்டப்படுவாரா என்பது இன்று நடைபெறும் வன்னியர் சங்க ஆலோசனை கூட்டத்தில் தெரியவரும் என்று கூறப்படுகிறது.