
ஜெய்ப்பூர்,
நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று மாலை நடந்த லீக் ஆட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணியை எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானை 10 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் வெற்றிபெற்றது. நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்ற பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
2014ம் ஆண்டுக்குப்பின் முதல் முறையாக பஞ்சாப் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இதனிடையே கடந்த ஆண்டு கோப்பை வென்ற கொல்கத்தா அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் செயல்பட்டார். அவரை 26.75 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி ஏலம் எடுத்த நிலையில் தற்போது பஞ்சாப் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இந்நிலையில், 2024 ஐ.பி.எல். கோப்பையை வென்ற ஸ்ரேயாஸ் ஐயருக்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை என்று சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். நேற்றைய ஆட்டத்தின்போது டி.வி. வர்ணனையில் பேசிய சுனில் கவாஸ்கர் , கொல்கத்தா அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீரை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த ஆண்டு ஐ.பி.எல். கோப்பையை வென்றபோது ஸ்ரேயாசுக்கு போதிய பாராட்டு கிடைக்கவில்லை. அனைத்து பாராட்டும் மற்றொருவருக்கு (கவுதம் கம்பீர்) சென்றுவிட்டது. மைதானத்தில் இருக்கும் கேப்டன்தான் ஆட்டத்தின்போது முக்கியபங்காற்றுகிறாரே தவிர ஓய்வு அறையில் அமர்ந்திருக்கும் நபர் அல்ல. இந்த ஆண்டு ஸ்ரேயாசுக்கு நியாயமான பாராட்டு கிடைக்கிறது. ரிக்கி பாண்டிங்கிற்கு (பஞ்சாப் பயிற்சியாளர்) யாரும் அனைத்து பாராட்டுகளையும் கொடுக்கவில்லை' என்றார்.