வனாமி இறால்கள் பெரும்பாலும் ஏற்றுமதிக்காக வளர்க்கப்படுகின்றன. அவற்றை முறையாக பதனம் செய்து ஏற்றுமதி செய்வது மிக மிக அவசியம். இறால்களை தரமான நிலையில் அறுவடை செய்திடவும், அவை பதனக்கூடங்களுக்கு சென்றடையும் வரை தரம் குறையாமல் பார்த்துக் கொள்வதற்கும் உரிய முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும்.
அறுவடைக்கான முன் ஏற்பாடுகள்:
அறுவடை செய்த இறால்களை சூரிய வெப்பம் அல்லது வெளிக்காற்றின் தாக்கத்தில் இருந்து காப்பதற்காக நிழல் வசதி கொண்ட காப்பிடம் அமைத்துக்கொள்ள வேண்டும். போதுமான அளவிற்கு வெப்பப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான நிலையில் உள்ள பெட்டிகள் மற்றும் தொட்டிகளை தயார் நிலையில் வைத்துக்கொள்ளவேண்டும். நொறுக்கப்பட்ட ஐஸ் கட்டிகளை தேவையான அளவிற்கு வைத்துக்கொள்ள வேண்டும். அறுவடை செய்த இறால்களை சேமிக்கும் இடங்களுக்கு கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பை வலைகளை போதுமான அளவில் வைத்துக் கொள்ளவேண்டும். இறால்களை குளிரூட்டிய நீரில் அமிழ்த்துவதற்கான கலன்களை அறுவடை செய்யும் இடங்களில் வைத்துக்கொள்ள வேண்டும். அறுவடையை வேகமாக மேற்கொள்வதற்கும், இறால்களை வேகமாக ஐஸ் கட்டி இட்டு பாதுகாப்பதற்கும் போதுமான எண்ணிக்கையில் பணியாட்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒரு கிலோ இறால்களை கெடாமல் பாதுகாக்க குறைந்தபட்சம் ஒரு கிலோ ஐஸ் கட்டியாவது பயன்படுத்தவேண்டும்.
வனாமி இறால்களை அறுவடை செய்யும் முறைகள்:
வனாமி இறால்களை வேகமாக அறுவடை செய்தால், அவற்றின் தரம் கெடாமல் பாதுகாப்பதற்கு ஏதுவாக இருக்கும். வனாமி இறால்களை 4 அடி நீரில் இழுவலையைக் கொண்டு அறுவடை செய்திட வேண்டும். எனவே நீரை வடிப்பதற்கான மதகு வசதியும், வடிகால் வசதியும் இறால் பண்ணைகளுக்கு அவசியம்.வேகமாக இறால்களை அறுவடை செய்யும்போது பாக்டீரியா நுண்ணுயிர்களின் தாக்குதலால் இறால்களின் தரம் கெடும் வாய்ப்பு குறைக்கப்பட்டு, தரமான நிலையில் பதனக்கூடங்களைச் சென்றடையும். அறுவடையை செய்யும்போது குளங்களில் உள்ள மென்மையான மேலோடு கொண்ட இறால்களின் விகிதங்கள் 5 – 10 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கிறதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும்.வெப்பம் குறைவாக உள்ள அதிகாலை, மாலை மற்றும் இரவு வேளைகள் அறுவடைக்கு ஏற்றவை. அறுவடை செய்யப்படும் இறால்களை உடனுக்குடன் சுத்தப்படுத்தி ஐஸ் கட்டி இடப்பட்ட குளிர்ந்த நீரில் அமிழ்த்தி அவை விரைவில்இறந்துவிடுமாறு (ஐஸ் கில்லிங்) செய்திட வேண்டும். இதனால் அவற்றின் தரம் குறைவது தடுக்கப்படுகிறது.
ஐஸ் கில்லிங் முறை
இறால்களை ஒரு சுகாதாரமான இடத்தில் வைத்து அவற்றை எடை வாரியாகத் தரம் பிரிக்கவேண்டும். பின்னர் அவற்றின் மொத்த எடையைக் கண்டறிய வேண்டும். எடை போடப்பட்ட இறால்களை சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக் கலன்களில் ஐஸ்கட்டிகள் கலந்து இடவேண்டும். இறால்களின் எடையில் இருமடங்கு என்ற அளவில் ஐஸ் இட வேண்டும்.முதலில் ஐஸ் கட்டிகளால் ஒரு அடுக்கு அமைத்துவிட்டு பின்னர் அதன்மீது இறால்களை ஒரு அடுக்காகப் போட்டுவிட்டு, பின்னர் அதன்மேல் மேலும் ஒரு அடுக்கு ஐஸ் கட்டி இடவேண்டும். இறால்களை ஐஸ் கட்டி இட்டு அடுக்கும் கொள்கலன்கள், உருகும் பனிக்கட்டி நீரை எளிதாக வெளியேற்றும் அமைப்பு கொண்டதாக இருக்க வேண்டும்.இவ்வாறு பனிக்கட்டி இடப்பட்டு பாதுகாக்கப்படும் இறால்களை, வெப்பப் பாதுகாப்பு (குளிர்சாதன வசதி கொண்ட வாகனங்கள் மூலம் பதன நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். பதன நிலையங்களைச் சென்றடையும் வரை அறுவடை செய்யப்பட்ட இறால்களின் வெப்பநிலை 4° செ.கி வெப்ப நிலைக்கு அதிகரிக்காதவாறு கண்காணித்துக் கொள்ளவேண்டும். அறுவடை செய்யப்பட்ட இறால்கள் இறந்தவுடன் அவை கெடத் துவங்கிவிடும். இறந்த இறால்களின் உடலில் உள்ள நொதிமங்களாலும், ரசாயன செயல்பாடுகளாலும், பாக்டீரிய நுண்ணுயிர்களின் செயல்பாடுகளாலும் அவை கெட்டுப்போகின்றன. அதிகரிக்கும் வெப்பநிலை கெடும் வேகத்தைத் துரிதப்படுத்தும். இறால்கள் 5° செ.கி. வெப்ப நிலையில் இருக்கும்போது 0 செ.கி வெப்ப நிலையில் இருப்பதை விட இருமடங்கு வேகத்தில் கெடத் துவங்கும். எனவே. ஐஸ் கட்டி இட்டு இறால்களைப் பாதுகாப்பது, இறால்களின் சுவை மற்றும் மணம் மாறாமல் அவற்றின் தரத்தைப் பாதுகாக்க உதவும்.
முறையாக ஐஸ் கட்டி இடுவதன் பயன்கள்
இறால்களை மிகக்குறைவான (0°செ.கி – 4 செ.கி.) வெப்பநிலையில் பாதுகாப்பதால் நுண்ணுயிர்கள் மற்றும் நொதிமங்களில் ஏற்படும் தரம் கெடுதல் குறைக்கப்படுகிறது. மேலும் இறால்களை ஈர நிலையில் வைத்திருப்பதால், மேல்பகுதியில் ஏற்படுகிற உலர்தல் மற்றும் எடைக்குறைவு தவிர்க்கப்படுகிறது. நல்ல தரமான பனிக்கட்டிகளை சுகாதாரமான நிலையில் இயங்கும் ஐஸ் கட்டி நிலையங்களில் இருந்து பெற வேண்டும். பனிக்கட்டிகளை தரையில் போட்டு சேமிப்பதை விட கொள்கலன்களில் போட்டு வைப்பது நல்லது.
தொடர்புக்கு:
முனைவர் க.சே. விஜய் அமிர்தராஜ்
தலைவர், மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி. 99944 50248.
The post வனாமி இறால்களைப் பதப்படுத்தும் முறைகள்! appeared first on Dinakaran.