*செல்போன் ஆப் மூலம் கணக்கெடுப்பு குழுவினர் பதிவு
விகேபுரம் : முண்டந்துறை வனச்சரகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது. முதல்நாளிலேயே முண்டந்துறையில் சிறுத்தையின் எச்சம் சிக்கியது. இதனை செல்போன் ஆப் மூலம் வனத்துறையினர் பதிவு செய்து கொண்டனர்.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திருக்குறுங்குடி முதல் கடையம் வரை 895 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. பல்லுயிர் பெருக்கத்திற்கு புகழ் பெற்ற இக்காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானை, கரடி, சிங்கவால் குரங்கு, செந்தாய்கள், கடமான் உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் மற்றும் மூலிகை தாவரங்கள் உள்ளது.
இங்கு ஆண்டுதோறும் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது. இந்தாண்டு வனவிலங்குகள் கணக்கெடுப்பை முன்னிட்டு கடந்த 22ம் தேதி முண்டந்துறையில் கணக்கெடுப்பு குழுவினருக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இதைதொடர்ந்து நேற்று முதல் புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இப்பணியில் அம்பை கோட்டத்திற்குட்பட்ட அம்பை, பாபநாசம், முண்டந்துறை, கடையம் உள்ளிட்ட வனச்சரகங்களில் வனத்துறை ஊழியர்கள் 150க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். இவர்கள் 34 குழுக்களாக பிரிந்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு குழுவில் 5 பேர் வரை உள்ளனர்.
களக்காடு வனச்சரகத்திற்கு 8 குழுவினரும், திருக்குறுங்குடி வனச்சரகத்திற்கு 8 குழுவினரும், கோதையாறு வனச்சரகத்திற்கு 5 குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர். முண்டந்துறை வனச்சரகத்தில் 13 இடங்களிலும், அம்பை வனச்சரகத்தில் 6 இடங்களிலும், பாபநாசம் வனச்சரகத்தில் 4 இடங்களிலும், கடையம் வனச்சரகத்தில் 7 இடங்களிலும் உள்ளிட்ட 30 இடங்களில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு குழுவிலும் வனக்காப்பாளர், வனக்காவலர், வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று முதல் வனப்பகுதியில் தங்கியிருந்து மார்ச் 1ம் தேதி வரை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். வனவிலங்குகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்கள், கால்தடங்களை சேகரித்தல் போன்ற முறைகளில் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். கணக்கெடுப்பு குழுவினர் தாங்கள் சேகரிக்கும் புள்ளி விவரங்களை செல்போன் ஆப்பில் பதிவு செய்து கொள்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முண்டந்துறை வனச்சரகத்திற்குட்பட்ட மல்காணி வாட்ச் டவர் பகுதியில் முண்டந்துறை வனச்சரகர் கல்யாணி தலைமையில் வனக்காப்பாளர் செல்லதுரை, வன காவலர் சுதாகர், தீ தடுப்பு காவலர் பாக்கியராஜ், வேட்டை தடுப்பு காவலர் ரமேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் சிறுத்தையின் எச்சம் காணப்பட்டது. எச்சத்தில் குரங்குகளின் பற்கள் இருந்தன.
சிறுத்தை குரங்குகளை வேட்டையாடி இருக்கலாம் என தெரிகிறது. தொடர்ந்து அக்குழுவினர் நேற்று முதல் 3 நாட்களுக்கு மாமிச உண்ணியை கணக்கெடுக்கும் பணியை 5 கிலோமீட்டர் தூரத்திற்கு மேற்கொள்ளவுள்ளனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு தாவர உண்ணிகளின் கணக்கெடுப்பு நேர்க்கோட்டில் சென்று கணக்கெடுக்கின்றனர்.
கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறையினர் செல்போன் ஆப் பயன்படுத்தி எச்சங்கள், கால் தடங்கள் ஆகியவற்றை பதிவு செய்கின்றனர். செல்போனில் சேகரிக்கப்படும் விவரங்கள், படங்கள் தேசிய புலிகள் ஆணையத்திற்கு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நேற்று தொடங்கியது முண்டந்துறை வனச்சரகத்தில் சிறுத்தையின் எச்சம் சிக்கியது appeared first on Dinakaran.