மேட்டுப்பாளையம், அக். 14: மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆடிக்குண்டம் திருவிழா பிரசித்தி பெற்றது. தொடர்ந்து அமாவாசை, விடுமுறை தினங்கள் உள்ளிட்ட நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.இந்நாட்களில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களது வாகனங்களிலும், வாடகை வாகனங்களிலும், இருசக்கர வாகனங்களிலும் பயணித்து கோயிலுக்கு வந்து அம்மனை தரிசனம் செய்து அருளாசி பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில், சமீப காலமாக வனபத்ரகாளியம்மன் கோயில் முதல் உப்பு பள்ளம் வரையிலான சாலையில் கால்நடைகள் தாராளமாக சுற்றி திரிகின்றன. இவை வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் போது திடீரென சாலையின் குறுக்கே வருவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதும், வாகனங்களில் வரும் பக்தர்களை கால் நடைகள் அச்சுறுத்துவதும் வாடிக்கையாகி வருகிறது. இதனால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் விபத்துகளில் சிக்கி காயமடைந்து வருகின்றனர். எனவே, தேக்கம்பட்டி ஊராட்சி நிர்வாகம், வனத்துறையினர், காவல்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் இணைந்து வாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பான பயணத்தை ஏற்படுத்தி தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post வனபத்ரகாளியம்மன் கோயில் செல்லும் சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் appeared first on Dinakaran.